ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கைக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடைமுறையில் இருக்கும் சட்டங்களை கொண்டு திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காப்பாற்றும் பணியை செய்து கொண்டு வருகிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:அதிமுக அரசு 2020 நவம்பர் மாதம் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் கோடிக்கணக்கான குடும்பத் தலைவிகள், பெற்றோர் வயிற்றில் பால் வார்த்தது. ஆனால் பெரிய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால் அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டினால் தங்களது பணத்தையும், வாழ்வையும் இழந்து மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிலேயே தவறான முறையில் ஈடுபட்டனர் என்றும், ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.

உதாரணமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு நபர் பணம் திருடுபோய்விட்டதாக போலி நாடகம் ஆடியதையும், ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டதையும் உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். எனவே, சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து மெய்நிகர் முறையில் அல்லது சைபர்ஸ் பேசில் நடத்தப்படும் விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இருந்து காக்க தேவையான சட்டத்தினை காலம் தாழ்த்தாது, உடனடியாக இயற்ற வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் முதல்வருக்கு மாற்று கருத்து இல்லை. ஆன்லைன் விளையாட்டு பல ஏழை குடும்பத்துடன் விளையாடுவதை முதல்வர் நன்கு அறிந்தவர். இந்த சட்டம் அதிமுக ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்டது. எதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது என்ற குறிப்புகள் முறையாக இல்லாததால்தான் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்தை நிலைநிறுத்தவே உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம். நடைமுறையில் இருக்கும் சட்டங்களை கொண்டு திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை காப்பாற்றும் பணியை செய்து கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

2 ஆண்டுக்கு பின்

இரண்டு ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவையில் பார்வையாளர்கள் மாடத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று நாமக்கல் நாச்சிபட்டி வித்யா மந்திர் மாணவர்கள் பேரவைக்கு வந்து, நிகழ்ச்சிகளை பார்த்தனர்.

Related Stories: