×

எம்எல்சி பதவியை ராஜினாமா செய்த யோகி: 25ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பு

லக்னோ: வரும் 25ம் யோகி ஆதித்யநாத் உ.பி முதல்வராக பதவியேற்க உள்ளதால் தனது எம்எல்சி பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்றதையடுத்து, தற்காலிக முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 25ம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார். இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்  சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்கு  வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (ஏகானா ஸ்டேடியம்) யோகி ஆதித்ய நாத் முதல்வராக மீண்டும் பதவியேற்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.  எவ்வாறாயினும், அமைச்சரவையின் முழுமையான பட்டியல் இன்னும் இறுதி  செய்யப்படவில்லை. யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்காக 200  வி.வி.ஐ.பி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இதுதவிர, இந்த பதவியேற்பு விழாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை யோகி ஆதித்ய நாத் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

அவர் கோரக்பூர் நகர்ப்புற தொகுதி எம்எல்ஏவாக தேர்தலில் தேர்வு செய்யப்பட்டதால், தனது எம்எல்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை சட்டப் பேரவைத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். அவரது ராஜினாமாவை சட்டப் பேரவை தலைவர் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Yogi ,MLC ,Chief Minister , MLC, Position, Resignation, Yogi
× RELATED ராஜஸ்தானில் இன்னொரு யோகி