×

கலைஞரின் படைப்புகள் தலைமுறை தலைமுறையாக பயணிக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

ஐஸ்வர்யா ராஜேந்திரன், சென்னையைச் சேர்ந்த ஓவியக்கலைஞர் - தொழிலதிபர் - ஃபேஷன் டிசைனர் எனப் பன்முகத் திறமைகளை கொண்டவர். ஆனால் அவருக்கு திறமையை விடத் தன்னுடைய தனித் திறன் மேல் தான் அதிக நம்பிக்கை. ‘‘ஓவியம் எனக்குள் தோன்றிய திறமை அல்ல. நானே வளர்த்துக்கொண்ட திறன். நமக்குப் பிடித்த ஒன்றை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப செய்து பழகும் போது, அது திறமையாக மாறிவிடுகிறது” என்கிறார்.

ஐஸ்வர்யாவின் ஓவியங்களில் பலவற்றில் அழகிய வண்ணங்களுடன் இந்தியக் கலாச்சாரத்தின் சாயலும் விண்டேஜ் ஸ்டைலும் வெளிப்படும். இரண்டு வயதிலிருந்தே வரையத் தொடங்கிய ஐஸ்வர்யா, அவருடைய 365 நாட்கள் சவால் பற்றி விவரிக்கிறார். “ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புது ஓவியம் என்று 365 ஓவியங்கள் வரைந்து முடிக்க வேண்டும். இது தான் சேலஞ்ச். இது எனக்கு நானே தேர்ந்தெடுத்த சவால்.

தினமும் உடல் நிலை சரியில்லாத போதும், வேறு முக்கிய வேலைகள் இருந்த போதும் கூட, எப்படியாவது சில நிமிடங்கள் ஒதுக்கி ஒரு ஓவியத்தை வரைந்துவிடுவேன். 365ம் நாள் என் ஓவியங்களை திரும்பி பார்த்த போது அதில் அவ்வளவு முன்னேற்றம் இருந்தது. இந்த சேலஞ்ச் எனக்கு பெரும் தன்னம்பிக்கையை அளித்தது. இந்த பயிற்சிக்குப் பின், என் மீது எனக்கே பெரும் நம்பிக்கையும் மரியாதையும் உண்டாகி, சுயமாக தொழில் தொடங்கும் அளவிற்கு ஊக்கத்தையும் அளித்தது’’ என்று கூறும் ஐஸ்வர்யா எட்டாம் வகுப்பில் இருந்தே தொழிலதிபராக வேண்டும் என்ற எண்ணத்தை தன் மனதில் ஆழமாக பதித்துள்ளார்.

‘‘ஓவியம், ஃபேஷன், தொழில் என எனக்குப் பிடித்த மூன்றையும் ஒன்றிணைத்து ‘ஐஷார் தி ஸ்டோர்’( Aishr the Store) மற்றும் ‘ராம்ருகி’ என இரண்டு ஆன்லைன் தொழிலையும் தொடங்கியுள்ளேன்”. ‘ஐஷார் தி ஸ்டோர்’ முழுமையாக ஐஷ்வர்யாவின் ஓவியங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் பொருட்கள். அதில் துணிகள், புத்தகங்கள், டிஜிட்டல் திருமண அழைப்பிதழ்கள், கடிதங்கள், சுவர் ஓவியங்கள் போன்ற பல பொருட்கள் அடங்கும். ‘ராம்ருகி’ சேலைகளுக்கான ஷாப்பிங் வெப்சைட். ஐஸ்வர்யா பயன்படுத்தும் பொருட்கள், துணிகள் பெரும்பாலும் இயற்கையாக தயாரிக்கப்படுபவை. பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், பொருட்களை பேக்கிங் செய்யும் போது கூட செலோ டேப்பை தவிர்த்து, அதற்குப் பதிலாக காட்டன் ரிப்பன்களை பயன்படுத்துகிறார்.

‘‘எனக்கு விரைவில் ட்ரெண்டாகி அதே வேகத்தில் காணாமல் போகும் ஃபேஷனில் நம்பிக்கை கிடையாது. என்னுடைய படைப்புகள் தலைமுறை தலைமுறையாக பயணிக்க வேண்டும். அதனால் தான் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய சேலைகளை இயற்கை முறையில் லிமிடட் எடிஷனாக தயாரிக்கிறேன். இந்த தலைமுறைக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பொருட்களாக இல்லாமல் இன்னும் பல வருடங்களுக்கு நவநாகரீகமாக இருக்கும் ஸ்டைலையே வடிவமைக்கிறேன்’’ என்றவர் பிரபல பாலிவுட் உடை வடிவமைப்பாளர் சப்யாசச்சியிடம் பணியாற்றியுள்ளார். அதற்கு பின் விளம்பர நிறுவனத்தில் வேலைக்கு ேசர்ந்தவர், ஐஷார் தி ஸ்டோர் ஆன்லைன் தொழிலை ஆரம்பித்துள்ளார். தனக்கென வாடிக்கையாளர்கள் உருவானதும், வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக தொழில்அதிபராக மாறிவிட்டார்.

‘‘பல கலைஞர்களும் வேறு படிப்பு படித்து, வேறு வேலையிலிருந்து, கலை மீதிருக்கும் ஆர்வத்தில் தங்கள் வேலை, படிப்பை விட்டு இங்கு
வருவார்கள். ஆனால் எனக்கு பள்ளி படிக்கும் போதே கலையிலும், சுய தொழிலிலும்தான் ஆர்வம். அதனால் நான் எனக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெளிவாக முடிவு செய்து அந்த ஒரே குறிக்கோள் நோக்கி என் பயணம் அமைந்தது. கல்லூரியில் சேரும் போது கூட எனக்குப் பிடித்த ஒரு கல்லூரியில் மட்டுமே விண்ணப்பித்தேன். வேறு எதிலும் விண்ணப்பிக்க கூட இல்லை. எனக்கு எப்போதும் ப்ளான் ‘A’ மட்டும்தான்” என்றவர் இன்றைய கலைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கை குறித்து டிப்ஸ் அளித்தார்.

‘‘ஒவ்வொரு கலைஞரும் கலைகள் சார்ந்த வரலாற்றை படித்திருக்க வேண்டும். நம் நாட்டில் பல தலைசிறந்த கலைஞர்கள் வாழ்ந்துள்ளனர். என்னை ஊக்குவித்தது ரவி வர்மாவின் ஓவியங்கள்தான். பல ஆண்டுகள் தாண்டியும் அவரது ஓவியங்கள் நிலைத்து நிற்கக் காரணம், அந்த ஓவியங்களில் இருக்கும் நிலைத்தன்மையும், அதிலிருக்கும் விவரங்களும்தான். அவர் ஓவியங்களில் அமைந்திருக்கும் பெண்களின் உடைகள் முதல் அவர்களின் சூழல் வரை நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த பாரம்பரியத்தை நம் கண்முன் கொண்டு வருவார். இதன் மூலம்தான் எனக்கும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் ஓவியங்கள் மீது ஆர்வத்தை உண்டாக்கியது. இப்படி வரலாற்றை தெரிந்துகொண்டாலே நமக்கான ஸ்டைலை கண்டுபிடித்துவிட முடியும்.

கலையை முதற்கட்ட தொழிலாகத் தேர்ந்தெடுத்திருக்கும் கலைஞர்கள், ஓவியம், எழுத்து, இசை என எந்த கலையாக இருந்தாலும், அதைத் தினமும் பழகி பயிற்சி எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்யும் பயிற்சிகள் மட்டுமே ஒருவரைச் சிறப்பாக்கும். எப்போதும் குறிப்புகள் எழுதி வைக்கச் சிறிய புத்தகத்தை உங்களுடன் வைத்திருங்கள். தோன்றும் யோசனைகளை அதில் குறித்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக ஏதாவது செய்துகொண்டிருக்கும் போதே, ஒரு காட்சி போல சில படங்கள் மனதில் தோன்றும். அதை உடனே எழுதி வைக்காவிட்டால், மறைந்து விடும்.

சமூக வலைத்தளங்கள் கலைஞர்களுக்கான வரப்பிரசாதம். நம் திறமையை வெளிப்படுத்த சிறந்த இடம். அங்கே நம்மைப் போல பிற கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பும் அமையும். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், தொடர்ந்து மனம் தளராமல் ஆர்வமுடன் உங்கள் வேலையைச் செய்து வந்தால், நிச்சயம் படிப்படியாக முன்னேற்றம் கிட்டும். நானும் முதலில் சமூக வலைத்தளம் மூலமாகத்தான் தொழிலை ஆரம்பித்தேன். அங்குக் கிடைத்த ஆதரவிற்குப் பின் இரண்டு நிறுவனங்களை அமைத்தேன்” என்கிறார்.

இன்று பல இளம் கலைஞர்களும், தங்களின் கலை மூலமாக அடக்குமுறைகளுக்கு எதிரான குரல்களைப் பதிவுசெய்து வருகின்றனர். உதாரணமாக, பெண்களை மோகப் பொருளாகப் பாரபட்சத்துடன் சித்தரிக்கும் புகைப்படங்கள், ஓவியங்களுக்கு மத்தியில் இப்போது பல வலுவான சமத்துவத்தையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் குரல்கள் உருவாகியுள்ளன.

இன்றைய கலைஞர்களும் சமூகத்தின் மீதான பார்வையை விரிவுபடுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேந்திரனும், அமெரிக்காவில் கறுப்பின மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதத்திலும், இந்தியாவில் பெண்களின் தோல் நிறம் மீது வைக்கப்படும் ஒடுக்குமுறையையும் எதிர்க்கும் வகையில் தன் கலையை அனைத்து பிரிவினருக்கும் ஆதரவாக பதிவுசெய்து வருகிறார். ‘‘என்னுடைய அடுத்தகட்ட முயற்சி, கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து தந்து, கைவினை கலைஞர்களுக்கும் மாத வருமானம் அமைத்து தரும் நோக்கத்தில், என் தொழிலை விரிவு செய்ய இருக்கிறேன். அதற்காக அயராமல் உழைத்து வருகிறேன்’’ என்றார் ஐஸ்வர்யா ராஜேந்திரன்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : artist ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...