×

பள்ளியாடி பழைய பள்ளியப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து

சுவாமியார்மடம் :சுவாமியார்மடத்தை அடுத்த வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளியாடியில் ‘பழைய பள்ளியப்பா’ திருத்தலம் உள்ளது. மும்மத பிரார்த்தனை தலமான இங்கு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை சர்வமத பிரார்த்தனையும், அடுத்த நாள் திங்கட்கிழமை மகா சமபந்தி விருந்தும் நடப்பது வழக்கம்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை விமரிசையாக நடத்த முடியவில்லை. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக சமபந்தி விருந்து மற்றும் சர்வமத பிரார்த்தனையை எளிமையாக நடத்த, பள்ளியாடி பழைய பள்ளியப்பா அறக்கட்டளையினர் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் மார்ச் 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் சர்வமத பிரார்த்தனை நடந்தது. நேற்று (திங்கட்கிழமை) சமபந்தி விருந்து நடந்தது. இதற்கான உணவு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சமபந்தி விருந்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமபந்தி விருந்துக்கான உணவு பொருள்கள் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்டன. காய்கறிகள், அரிசி, வாழைக்குலைகள் என பக்தர்கள் பெருமளவில் பொருட்களை வழங்கினர். இவற்றில் வாழைப்பழங்கள் சர்வமத பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியாடி பழைய பள்ளியப்பா அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Swamiyarmadam: ‘Old Palliyappa’ correction at Palliyadi under the Valvachakoshtam Municipality next to Swamiyarmadam
× RELATED நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது