ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை... சசிகலா மீது மரியாதை உள்ளது... ஓ பன்னீர் செல்வம் பல்டி

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் 9வது சம்மனுக்காக 2வது நாளாக இன்று ஆஜரானார். அப்போது ஓ பன்னீர் செல்வம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி வேட்பாளரை தேர்வு செய்ததும் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் தரப்பட்டது என்பது எனக்கு தெரியாது. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் கூறவில்லை. அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சிலமுறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா கூறினார்.சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் எங்கும் பேசவில்லை

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 04ம் தேதி ஜெயலலிதாவிற்கு இதயம் செயல் இழந்த பின்பாக மீண்டும் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது. ஆனால் மாலை 05.30 மணிக்கு எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். டிசம்பர் 4ல் ஜெயலலிதாவை சந்திக்காமல் அப்போலோ தலைவர் பிரதாப்பை சந்தித்தது பற்றி நினைவில்லை. டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் உட்பட மூன்று அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தோம், என்றார். தொடர்ந்து ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை கேட்டதும் அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தானே என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான் ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன். தனிபட்ட முறையில் சசிகலா மீது மரியாதையும் அபிமானமும் இப்பொது வரை உள்ளது.சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுகளை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன், என்றார்.

Related Stories: