×

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க திரண்ட மக்கள்-292 மனுக்கள் பெறப்பட்டது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க ஏராளமானோர் திரண்டனர். இதில் மொத்தம் 292 பேர் மனுக்கள் பெறப்பட்டது.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறை அதிகாரிகள் மூலமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதன்படி, ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 292 மனுக்கள் பெறப்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா நெடும்புலி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் நெடும்புலி ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருகிறோம். நெடும்புலி ஊராட்சிக்கு உட்பட்ட சர்வே- எண்: 91ல்  ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்து சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனைகளை எங்களுக்கு பட்டா வழங்ககோரி ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது, உரிய விசாரணை செய்து அனைவருக்கும் பட்டா வழங்குகிறோம், என்று அதிகாரிகள் கூறினர்.

ஆனால், இதுநாள் வரை வழங்கப்படவில்லை. எனவே, மீதமுள்ள மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.அவலூர் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமம் வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை கடந்து மிகவும் ஆபத்தான நிலையில் விவசாய நிலங்களுக்கும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் கொண்டு சென்று வருகிறோம். இந்நிலையில், பொதுமக்கள் எளிதில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்ககோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே, அவலூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த திருநங்கைகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டையில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்து வருகிறோம். பெற்றோர் கைவிட்ட நிலையில், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை சங்கர் கோயில் பூசாரியாக இருந்தார். கடந்த 2018ம் ஆண்டு கோயில் திருவிழாவில் தீமிதி நிகழ்வின்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தீயில் விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். எனது தந்தை இறந்து 3 ஆண்டுகளான நிலையில் எனது தாயாருக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வாலாஜா தாலுகா வேலம் பிர்கா கிராமமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலம் பிர்காவில் 20ஆயிரம் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குறைந்த தூரத்தில் உள்ள வாலாஜா தாலுகாவில் இருந்து பிரித்து சோளிங்கர் தாலுகாவில் சேர்க்க வேண்டி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சோளிங்கர் தாலுகாவில் சேர்க்கப்பட்ட வேலம் பிர்க்காவை மீண்டும் வாலாஜா தாலுகாவில் சேர்க்கப்படும், என்று கடந்த 2021ம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதுநாள் வரையிலும் வேலம் பிர்க்கா சோளிங்கர் தாலுகாவிலேயே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, வேலம் பிர்க்காவை வாலாஜா தாலுகாவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.ஆற்காடு தாலுகா கூராம்பாடி கிராமமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தி உள்ள மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்கு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை வேறு ஊராட்சியில் வசிக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க கூடாது.  எங்கள் கிராம ஊராட்சியில் 125 குடும்பங்களுக்கு மேல் சொந்தமாக வீட்டுமனை பட்டா இல்லாமல் வசிப்பவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நெமிலி தாலுகா மேலேரி கிராமத்தைச் சேர்ந்த தீபா என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் மூர்த்தி கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்கள் கிராமத்தில் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணி காலியாக உள்ளது. எனவே, எனக்கு ஏதேனும் ஒரு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் டிஆர்ஓ முஹம்மது அஸ்லம், சமூக பாதுகாப்பு திட்ட் தனித்துணை ஆட்சியர் தாரகேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Military ,Collector ,Office , Ranipettai: A large number of people gathered at the Ranipettai Collector's office yesterday to file a petition at the grievance meeting. In which
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின் போது 2...