×

மணக்குடியில் உலக வன நாள் கொண்டாட்டம் குமரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு-கலெக்டர் தகவல்

நாகர்கோவில் :  உலக வன நாளையொட்டி குமரி மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மணக்குடியில் நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட வன அலுவலர் இளையராஜா முன்னிலையில் மணக்குடி, பொழிமுகம் பகுதியில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார். இங்கு 250 ரைசோபோரா மரக்கன்றுகள் நடப்படுகிறது. பின்னர் கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:

காடுகள் மக்களுக்கு வழங்கும் சேவைகளை போற்றும் விதமாகவும், காடுகளை பாதுகாப்பதற்காகவும் உலக வனநாள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய வன கொள்கையின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 33 சதவீதம் வனபரப்பு பெற்றிருக்க வேண்டும். வனபரப்பு என்பது வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் என்ற கணக்கில்லை. ஒரு ஹெக்டேருக்கு மேல் மரங்கள் இருப்பதே வனபரப்பு ஆகும்.

ஆனால்  குமரி மாவட்டத்தின் சிறப்பு என்பது 33 சதவீதம் பாதுகாக்கப்பட்ட காடுகளே இருக்கிறது. வனப்பரப்பு 59.5 சதவீதம் நமது மாவட்டத்தில் உள்ளது. தமிழகத்திலேயே நீலகிரிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது வனப்பரப்பு உள்ள மாவட்டம் நமது கன்னியாகுமரி மாவட்டமாகும்.தமிழக அரசு மேலும் காடுகளை அதிகரிப்பதற்காக பசுமை திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நமது மாவட்டத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில் ஒவ்வொரு துறையின் கீழ் எவ்வளவு மரங்கள் நடலாம் என்று ஆய்வு செய்யப்படுகிறது.

இதில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் சதுப்புநில காடுகளை பாதுகாக்கும் வண்ணம் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்   நிகழ்வின் தொடக்கமாக மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மாங்ரோவ் மரங்கள் கடல் அரிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கும் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாங்ரோவ் மரங்கள் அதிகரிக்கும் போது பறவைகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.  குறிப்பாக ஆற்று நீரோடு கடல் நீர் கலக்காமல் தடுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஹீல் தொண்டு நிறுவன இயக்குநர் சிலுவை வஸ்தியான், கன்னியாகுமரி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உலக தண்ணீர் தினம் கொண்டாட்டம்

குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்  நாகர்கோவிலில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உலக வன நாள்  மற்றும் உலக தண்ணீர் தினம் நேற்று ெகாண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல்  ஒருங்கிணைப்பாளர் மலர்விழி வரவேற்றார். மாவட்ட வன அதிகாரி இளையராஜா  தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி முன்னிலை  வகித்தார். கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு மரக்கன்று  நட்டார்.

செண்பகராமன்பதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு  மாணவி கஸ்தூரி 110 தாவரவியல் பெயரை 55 நொடி 35 நானோ நொடிகளில்  ஒப்புவித்து உலக சாதனை புரிந்தமைக்காக கலெக்டர் வாழ்த்துக்களை  தெரிவித்தார்.நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் பிரின்ஸ்  ஆரோக்கியராஜ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்  (மேல்நிலைக்கல்வி) சுரேஷ்பாபு, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்  பிராங்கிளின் ஜேக்கப் உள்பட பலர் கலந்து கொண்டனர். உலக வன தினம், உலக  தண்ணீர் தினம் தொடர்பாக பரமபதம் உள்ளிட்ட விழிப்புணர்வு விளையாட்டுகள்  நடந்தது.

Tags : World Forest Day ,Manakkudi , Nagercoil: A sapling planting program on behalf of the Kumari District Forest Department was held in Manakkudi on the occasion of World Forest Day. Kumari District
× RELATED கமுதி அருகே வேளாண் கல்லூரியில் உலக நீர் தினம்