×

பெரணமல்லூர் கூட்டுறவு வங்கியில் உரம் வாங்க அலைமோதிய விவசாயிகள்

பெரணமல்லூர் : பெரணமல்லூர் கூட்டுறவு வங்கியில் உரத்திற்காக விவசாயிகள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக நாற்று நடவு முடிந்து, களை எடுத்தவுடன் பயிர் வளர்ச்சிக்காக தழைச்சத்து வேண்டி உரத்தினை விவசாயிகள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக யூரியா தட்டுப்பாடு திருவண்ணாமலை மாவட்டத்தில்  நிலவி வருவதால், விவசாயிகள் அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்று  யூரியாவை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பெரணமல்லூர் கூட்டுறவு வங்கியில் உரத்தினை விற்பனை செய்வதை அறிந்த விவசாயிகள் காலை முதல் கூட்டுறவு வங்கியில் உரத்திற்காக அலைமோதினர். அதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கியில் அலைமோதிய கூட்டத்தை கட்டுப்படுத்த பெரணமல்லூர் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட  நிலையில் கூட்டுறவு வங்கியின் முன்புற கதவு இழுத்து மூடப்பட்டது.

பின்னர் ஒவ்வொருவராக சென்று பெரணமல்லூர் பகுதி விவசாயிகள் என அறிவதற்கான ஆதார் அட்டையை காட்டி உரத்திற்கான ₹267 செலுத்தி டோக்கன் பெற்று ஒரு மூட்டை யூரியா உரம்  வாங்கி சென்றனர். காலை முதல் மாலை வரை கூட்டுறவு வங்கி வளாகம் முன் கூட்டம் அலை மோதியதால், பெரணமல்லூர் பேரூராட்சி பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

குறிப்பாக பெரணமல்லூர் கூட்டுறவு வங்கிக்கு 12 டன் மட்டுமே யூரியா உரம் வந்து இறங்கியதால், டோக்கன் பெறுவதில் விவசாயிகள் அலைமோதியது பார்க்கும்போது விவசாயத்திற்கு யூரியா உரம் இன்றியமையாதது என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிந்தது.


Tags : Peranamallur Co-operative Bank , Peranamallur: A crowd of farmers rallied for fertilizer at Peranamallur Co-operative Bank.
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...