திருப்பத்தூர் நகராட்சியில் 150 கிலோ அழுகிய மாட்டிறைச்சி பறிமுதல்-3 கடைகளுக்கு `சீல்’ வைப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 3 மாட்டிறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர். மேலும் 150 கிலோ அழுகிய மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சுல்தான் மியான் தெருவில் உள்ள 24, 25, 27 ஆகிய வார்டுகளில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அதே பகுதியில் மாட்டு இறைச்சி கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இறைச்சியில் இருந்து வரும் கழிவுகளை அருகே உள்ள கால்வாயில் கலக்கின்றனர். மேலும் மாட்டின் தோலினை மிக நீண்ட நாட்களாக பதப்படுத்தி வைத்துள்ளனர்.

இதனால் அதிலிருந்து வெளியேறும் நுண்ணுயிர்கள் மூலமாக  நோய் தொற்று அபாயம் ஏற்படுவதாக கூறி பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாததால் அப்பகுதி மக்கள் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கவுன்சிலர், ஆகியோரிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனரிடம், ‘உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிடில் பொதுமக்கள் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என நேற்று எச்சரித்தனர். அதன் அடிப்படையில் உடனடியாக நகராட்சி கமிஷனர் ஜெயராம ராஜா மற்றும் துப்புரவு ஆய்வாளர் விவேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 கடைகளில் நீண்ட நாட்களாக பதப்படுத்திய வைத்திருந்த தோல் கழிவுகள், மற்றும் காலாவதியாகி அழுகிய 150 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவற்றிலிருந்து தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாவூஷா நகரில் அமைந்துள்ள உரக்கிடங்கில் புதைத்தனர். மேலும் 3 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். மேலும் கடை நடத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: