×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு; மாநிலங்களவையும் முடங்கியது..!!

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2021 நவம்பர் 4ம் தேதிக்குப் பின்னர் முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்குப் பிறகு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் சாமான்ய மக்களை வெகுவாகப் பாதிக்கும் என்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விலை உயர்வு நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.  5 மாநில தேர்தலுக்குப் பின்னரே இந்த விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். சமையல் எரிவாயு விலையை ரூ.50 உயர்த்தி இருப்பது சரியல்ல என்று எதிர்க்கட்சிகள் சாடினர். காங்கிரஸ், திமுக, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல்., மதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு எதிராக மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதன் காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Lok Sabha , Petrol, Diesel, Lok Sabha, Opposition, Outreach
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...