வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளியில் 150 பயிற்சி காவலர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

வேலூர் : வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளியை சேர்ந்த 150 பயிற்சி காவலர்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை சைபர் கிரைம் போலீசார் நடத்தினர்.

வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன், வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெறும் காவலர்களுக்கு பெருகி வரும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார். அதன்படி வேலூர் தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெறும் 150 பயிற்சி காவலர்களுக்கு, பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

 குறிப்பாக  இணையம்  வழியாக நடக்கும் குற்றங்களான, ஏடிஎம் கார்டு மற்றும் ஓடிபி  எண் பகிரக்கூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் பகிரக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, இ-பைக் டீலர்ஷிப், கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், கிரிப்டோ கரன்சி மோசடி குறித்தும், அது தொடர்பாக துப்பு துலக்குவது தொடர்பாகவும் விளக்கப்பட்டது.

அத்துடன், அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு  அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும்  மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவிக்கு 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும்  பயிற்சி காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: