×

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 6 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் : சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து 6 பேர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் அடுத்த உடையாப்பட்டி பாலமுருகன் கோயில் தெரு பகுதியை  சேர்ந்தவர் ஆனந்தி(53). இவரது மகன் நாகராஜன்(31), அம்மாப்பேட்டையில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி (28) என்ற மனைவியும், கதிரவன்(12), சரண்(10) என்ற இரு மகன்களும் உள்ளனர். நேற்று காலை  கலெக்டர் அலுவலகம் வந்த இவர்கள், திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இதில், அயோத்தியாபட்டணம்  பகுதியை சேர்ந்த ஒருவர் நாகராஜனுக்கு ₹67 லட்சம் கடன் கொடுத்ததாகவும், அதை  நாகராஜன் திருப்பித் தர மறுத்ததாகவும் கூறி, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேசனில் பொய்  புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த பணத்தை கேட்டு குடும்பத்தினருக்கு கொலை  மிரட்டல் விடுப்பதாகவும் நாகராஜன் தெரிவித்தார். தொடர்ந்து இதுகுறித்து,  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உடையாப்பட்டியைச் சேர்ந்த ஆண்டி, சண்முகம், முத்துசாமி ஆகிய 3 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் தீக்குளிக்க முயன்ற நாகராஜன், தங்களிடம் சுமார் ₹10 லட்சம் வரை பணம் மற்றும் காரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்தனர். முன்னதாக, மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த விஜயா என்பவர், தனது வளர்ப்பு மகன் கோகுலகிருஷ்ணனுடன் வந்தார். அப்போது விஜயா மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது விஜயா கூறுகையில், ‘‘எனது கணவர் ரங்கநாதனுக்கும், எனக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் கோகுலகிருஷ்ணன் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறோம். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் கணவர் உயிரிழந்து விட்டார். இதனால் குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வருகிறேன். இதனிடையே, எனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை கணவரின் சகோதரர் அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். மேலும், நிலத்திற்கு செல்ல வழி விடாமல், குடிநீர் வராமல் தடுத்து நிறுத்தி என்னையும், மகனையும் கொடுமைப்படுத்துகிறார். இதுகுறித்து, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தீக்குளிக்க முயன்றேன்’’ என்று தெரிவித்தார்.



Tags : Salem ,Collector's Office , Salem: Attempts by 6 people to set fire to the Salem District Collector's Office in a row yesterday caused a stir. Next to Salem
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...