×

ஒரு மாதத்தில் ₹40 லட்சம் மதிப்பில் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்-மதுவிலக்கு எஸ்பி தகவல்

ஓசூர் :  ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் திடீர் ஆய்வு செய்த மதுவிலக்கு எஸ்பி மகேஷ் குமார், கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வந்த ₹40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கர்நாடக மாநிலத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் மற்றும் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், குடிமகன்கள் கர்நாடகாவுக்கு சென்று அங்கிருந்து மதுபாட்டில்களை கடத்தி வருகின்றனர். போலீசாரின் கெடுபிடி காரணமாக, அவர்கள் காய்கறி வாகனங்கள் மற்றும் மளிகை பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களில் மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுகடத்தலை தவிர்க்க மாவட்ட கலால் எஸ்பி மகேஷ்குமார் உத்தரவின்பேரில், டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் இரவு, பகலாக தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர் மாவட்டம், பள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம்(36) என்பவர் தனது சொகுசு காரில் கடத்தி வந்த 1056 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல், கர்நாடக மாநிலம் உத்திரஹள்ளி பாலாஜி நகரை சேர்ந்த மணிவண்ணன்(27) என்பவர் காரில் கடத்தி வந்த 96 மது பாட்டில்களையும், கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேகுளி அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்த அரவிந்த் (28) என்பவர் டூவீலரில் கொண்டு வந்த 288 மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுவிலக்கு எஸ்பி மகேஷ்குமார் கூறுகையில், ‘ஊரடங்கு காலமான கடந்த ஒரு மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றி வரும் வாகனங்களிலும், கார் மற்றும் டூவீலர்களிலும் கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வந்தது. அதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் இதுவரை ₹40 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை கடத்தி வந்த 40 கார்கள் மற்றும் 80 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநில எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது,’ என்றார். அப்போது டிஎஸ்பி சங்கர் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்….

The post ஒரு மாதத்தில் ₹40 லட்சம் மதிப்பில் கர்நாடக மதுபாட்டில்கள் பறிமுதல்-மதுவிலக்கு எஸ்பி தகவல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Osur ,SP ,Mahesh ,Jujuwadi ,Dinakaran ,
× RELATED கோயிலில் திருட முயன்ற கர்நாடக வாலிபர் கைது