×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை!: பல்வேறு கேள்விகள் எழுப்ப திட்டம்..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. முதல் நாளான நேற்று ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியது. 78 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அச்சமயம் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? யார் சிகிச்சை அளித்தது என்ற எந்த விவரமும் தெரியாது என ஓ.பி.எஸ். கூறியிருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்துகொண்டபோது ஜெயலலிதாவைப் பார்த்தேன்.

அதற்குப் பின்னர் அவரைப் பார்க்கவில்லை எனவும் கூறியிருந்தார். விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார்? ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்? என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, `பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்திருந்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதிலளித்தார்.  இந்நிலையில், 2வது நாளாக சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் ஆஜரான ஓ.பி.எஸ்.சிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருத்து நிலவி வரும் நிலையில், தற்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் என்ன பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்திருக்கிறது. இந்த விசாரணைக்கு பின்பாக சசிகலா தரப்பு வழங்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது.


Tags : Arumugasami Commission ,O. Panneerselvam ,Jayalalithaa , Jayalalithaa's death, O. Panneerselvam, Arumugasami Commission
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...