×

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு வீடு: எம்எல்ஏ ஆர்.டி.சேகரின் கேள்விக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்

பேரவையில் கேள்வி நேரத்தின்போது பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் (திமுக) பேசியதாவது: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உதயசூரியன் நகர் திட்டப் பகுதியில் 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட 684 அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் சேதம் அடைந்து மக்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத நிலையில் உள்ளது. ஆகவே அதை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்து தர அரசு முன்வருமா என அறிய விரும்புகிறேன்?

அமைச்சர் தா.மோ.அன்பரசன்: சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு சிறப்புக் குழுவின் மூலம் மறு ஆய்வு செய்து குடியிருப்புகள் மிகவும் மோசமாக உள்ளது என சான்று அளித்த பின் மறு கட்டுமானம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆர்.டி.சேகர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் சிதிலமடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு மறு கட்டுமானம் செய்யப்படும் போது கிடைக்கும் அதிகப்படியான குடியிருப்புகளை இதே தொகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை, எளிய குடும்பங்கள் அதிக அளவில் உள்ளதால் அவர்களுக்கும் வீடுகள் வழங்கி உதவிட அரசு முன் வர வேண்டும்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன்: சிதிலம் அடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு, மறு கட்டுமானம் செய்யும்போது கிடைக்கும் அதிகப்படியான குடியிருப்புகளை, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்துக்கு உட்பட்ட வேறு எங்கும் சொந்தமாக வீடு இல்லாத பொருளாதாரத்தில் நலிவுற்ற இதே பகுதியைச் சேர்ந்த குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி பயனாளிகள் பங்களிப்பினை செலுத்த முன்வரும் பயனாளிகளுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

உத்திரமேரூரில் தடுப்பணைகள் கட்ட சுந்தர் எம்எல்ஏ வலியுறுத்தல்: பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி உத்திரமேரூர் ெதாகுதி திமுக எம்எல்ஏ க.சுந்தர் பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாறும், செய்யாறும் ஓடுகிறது. குறிப்பாக உத்திரமேரூர் தொகுதியில் இரு பக்கமும் பாலாறும், செய்யாறும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட  கடும் வெள்ளத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். எனவே, அங்கு தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: ஏற்கனவே சில தடுப்பணைகள் கட்டியிருக்கிறோம். வருகிற நிதி ஆண்டிலும் குறிப்பிட்ட சில இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கோரிக்கை சென்னை மாநகராட்சியோடு செங்குன்றம் பேரூராட்சி: பேரவையில் கேள்வி நேரத்தின் போது மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம் பேசியதாவது: செங்குன்றம் பேரூராட்சியில் 40,000 பேர் வசிக்கிறார்கள். நிதி ஆதாரம் இல்லாத பேரூராட்சியை, சென்னை மாநகராட்சியோடு இணைத்து எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: செங்குன்றத்தில் 40,000 மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு, முதல்வரின் அனுமதி பெற்று, சென்னை மாநகராட்சியோடு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது தான் உள்ளாட்சி தேர்தல் முடிந்து இருக்கின்றது. எனவே, உடனடியாக செய்வது என்பது முடியாது. எனவே, உரிய நேரத்தில் செய்ய அரசு ஆவன செய்யும்.

ஈரோடு கல்லூரியை அரசுக்கு மாற்றும் சட்டமுன்வடிவு தாக்கல்: சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது: ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தற்போது அரசுக்கு மாற்றப்படலாம் மற்றும் ஒப்படைக்கப்படலாம் என கருதப்படுகிறது. எனவே, அதன் நோக்கத்திற்காக சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. இச்சட்டமுன்வடிவு இயற்றப்படும் போது மற்றும் நடைமுறைக்கு கொண்டு வரும் போது மாநிலத்தின் தொகு நிதியத்திலிருந்து செலவு செய்ய நேரிடும். எனினும் கருதப்பட்டுள்ள இச்சட்டத்தை இயற்றுவதன் விளைவாக ஏற்படக்கூடிய செலவினத்தை இந்த நிலையில் எந்த கோணத்திலும் துல்லியமாக மதிப்பிட முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Thamo Anparasan ,MLA ,RD Sekhar , Home for the economically weak: Minister Thamo Anparasan answers MLA RD Sekhar's question
× RELATED சென்னை ராஜீவ் காந்தி அரசு...