திருப்போரூர்: உலக மகளிர் தினவிழா திருப்போரூர் அருகே தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. அதில் எஸ்பி அரவிந்தன் கலந்து கொண்டு, பல்வேறு சாதனைகளை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் உலக மகளிர் தினவிழா நேற்று திருப்போரூர் அருகே காலவாக்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. எஸ்பி அரவிந்தன் தலைமை தாங்கினார். இந்திய பெண்கள் அமைப்பின் தலைவரும், முன்னாள் குடியரசு தலைவர் வெங்கட்ராமனின் மகளுமான பத்மா வெங்கட்ராமன், தனியார் நிறுவன இயக்குனரும், தொழிலதிபருமான மரகதவல்லி ஆகியோர் உலக மகளிர் தின விழிப்புணர்வு உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கடந்த 2 ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில், மாவட்டம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், தலைமைக் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர், தலைமை ஆசிரியைகள், ஆசிரியைகள், துப்புரவு பணியாளர், பெண் பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு, தற்போது வரை 35 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பல்வேறு விருதுகளை பெற்ற 9 வயது சிறுமி பிரசித்தி என்பவருக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் 2 கைகளையும் இழந்து தன்னம்பிக்கையை விடாமல் டிரம்ஸ் வாசித்து சாதனை புரிந்த கலைஞர் டான்சீன் என்பவரது, டிரம்ஸ் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் தனியார் கல்லூரி முதல்வர் அண்ணாமலை, துணை முதல்வர் இராதா ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.