×

மரியுபோல் நகரில் பேரழிவு ஏற்படுத்துவோம் என எச்சரித்தும் ரஷ்யாவிடம் சரணடைய உக்ரைன் மறுப்பு: சுமி ரசாயன ஆலை மீதான தாக்குதலால் அமோனியா வாயு கசிந்து பெரும் ஆபத்து

லிவிவ்: மரியுபோல் நகரில் பேரழிவு ஏற்படுத்துவோம் என எச்சரித்தும் ரஷ்யாவிடம் சரணடைய உக்ரைன் அரசு மறுத்து விட்டது. ஆயுதங்களை கீழே போடும் பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் கூறி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம், தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல், சுமி உள்ளிட்ட நகரங்களில் 26வது நாளாக தொடர்ந்து நேற்றும் தாக்குதலை நடத்தியது. மரியுபோல் நகரம் இப்போரில் மிகக்கடுமையாக உருக்குலைந்துள்ளது. இங்கு சுமார் 4 லட்சம் மக்கள் உயிர் தப்பிக்க தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அடைக்கலாம் அடைந்துள்ள தியேட்டர், பள்ளி மீது ரஷ்யா குண்டுவீசி தாக்கி உள்ளது. இக்கட்டிடங்களின் அடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மரியுபோலின் பெரும்பாலான பகுதிகளை நாசம் செய்துள்ள ரஷ்ய ராணுவம், இந்நகரில் உள்ள உக்ரைன் படைகள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய வேண்டும், மனிதாபிமான பாதை வழியாக நகரை விட்டு வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் பேரழிவு ஏற்படும், ரஷ்ய நேரப்படி நேற்று அதிகாலை 5 மணிக்குள் உக்ரைன் ராணுவம் சரணாகதி அடைய வேண்டும் என கெடு விதித்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சரணடைய மறுப்பு தெரிவித்தது உக்ரைன் அரசு. அந்நாட்டின் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் வெளியிட்ட அறிக்கையில், ‘சரணடைதல், ஆயுதங்களை கீழே போடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது குறித்து ரஷ்ய தரப்பிற்கு ஏற்கனவே நாங்கள் தெரிவித்து விட்டோம்’ என்றார். உக்ரைன் சரணடைய மறுத்த நிலையில் அங்கு மீண்டும் குண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. மரியுபோலில் அனைத்து தெருக்களிலும் சண்டை நடப்பதாகவும், அனைத்து வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அங்கிருந்து தப்பி வந்த மக்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

இதே போல தலைநகர் கீவ் நகரில் வணிக வளாகம் மீது நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 8 பொதுமக்கள் பலியாகினர். கிழக்கு உக்ரைனில் உள்ள சுமியின் புறநகரான சுமைகிம்போர்ம் பகுதியில் உள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய ராணுவம் நேற்று குண்டுகளை வீசி தாக்கியது. இதன் காரணமாக, ஆலையில் உள்ள 50 டன் டேங்கில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலையில் இருந்து 1.5 கிமீ தொலைவில் நோவோசெலிட்ச் கிராமத்தில் அமோனியா வாயு பரவி உள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடினாலும், அப்படையால் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண முடியவில்லை என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைனின் அழைப்பை ஏற்று, ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் மத்தியஸ்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

* அரியானா மாணவிகள் 2 பேர் சிக்கி தவிப்பு
உக்ரைனில் இருந்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அரியானாவைச் சேர்ந்த தன்னு கர்சன் (19), சிமிரன் கவுர் (19) ஆகிய 2 மாணவிகள் கெர்சன் நகரில் சிக்கியிருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி உள்ளார். கெர்சன் நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்த மற்ற 3 மாணவர்கள் கிரிமியா வழியாக ரஷ்யா சென்று அங்கிருந்து இந்தியா திரும்பி விட்டதாகவும், 2 மாணவிகள் மட்டும் இன்னும் கெர்சனில் சிக்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க வேண்டுமெனவும் எனவும் கடிதம் எழுதி உள்ளார்.

* அதிபர் பைடன் போலந்து பயணம்
உக்ரைனில் போர் நடத்தி வரும் ரஷ்யா, அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா எல்லையை ஒட்டியும் குண்டுவீசி தாக்குதல் நடத்துகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்துக்கு இந்த வாரம் பயணம் செய்ய இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. புருசெல்ஸ் நாட்டிற்கு செல்லும் பைடன், அங்கிருந்து போலந்து சென்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்த உயர்மட்ட ஆலோசனையில்,. நேட்டோ நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி தருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ukraine ,Russia ,Mariupol ,Sumi , Ukraine refuses to surrender to Russia, warns of catastrophe in Mariupol: Ammonia gas leak due to attack on Sumi chemical plant
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...