பிஎன்பி பாரிபா ஓபன் ஸ்வியாடெக், டெய்லர் சாம்பியன்கள்: நடால், சாக்கரிக்கு 2வது இடம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர். அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடந்த இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பைனலில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (6வது ரேங்க், 26 வயது) மோதிய ஸ்வியாடெக் ( 4வது ரேங்க், 20 வயது) 6-4, 6-1 என நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 11 ஆட்டங்களில் வென்றுள்ள ஸ்வியாடெக், நடப்பு சீசனில் பெறும் 2வது டபுள்யுடிஏ 1000 சாம்பியன் பட்டம் இது. சமீபத்தில் நடந்த கத்தார் ஓபனிலும் அவர் பட்டம் வென்றிருந்தார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் அவர் வென்ற 5வது பட்டம் இது.

உள்ளூர் ஹீரோ: ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் ( 4வது ரேங்க், 35வயது) மோதிய அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் (20வது ரேங்க், 24 வயது) 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்று முதல் முறையாக இந்த தொடரிலும், தனது முதலாவது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார். சொந்த ஊரில் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் தனது சிறு வயது கனவு நனவானதாகவும், இத்தொடரில் நீயும் ஒருநாள் சாம்பியனாவாய் என்று தனது தந்தை சொன்னது பலித்துவிட்டதாகவும் பிரிட்ஸ் மகிழ்ச்சி + நெகிழ்ச்சியுடன் கூறினார். 37வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 சாம்பியன் பட்டத்துடன் ஜோகோவி சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கிய நடால் 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். இந்த தோல்விக்கு முன்பாக நட ப்பு சீசனில் அவர் தொ டர்ச்சியாக 20 வெற்றிகளை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: