×

என் மனம் கனத்து போயுள்ளது காவிரி போராட்டம் பேரன், கொள்ளுப்பேரன் வரை நீடித்து கொண்டு போகுமோ என்ற வேதனை உள்ளது: பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: காவிரி பிரச்னையில் என் மனம் கனத்து போய் உள்ளது. இந்த பிரச்னை என் கொள்ளுப்பேரன் வரை இருக்குமோ என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு தனி தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன்னர் பேசியதாவது: காவிரி தண்ணீர் தருவதில் இப்படி தகராறு இருக்கிறதே. ஒரு தீர்ப்பாயம் அமைக்கலாம் என்ற போது, அதை அமைக்கக்கூடாது என்று கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் முட்டுக்கட்டை போட்டார்கள். அதையும் முறியடித்து ஒரு தீர்ப்பாயத்தை கொண்டு வந்தோம். அதில் ஒரு இடைக்கால தீர்ப்பு வேண்டும் என்று கேட்டோம். அது கொடுக்கக்கூடாது என்ற முட்டுக்கட்டை போட்டார்கள். அதையும் வாதத்தால் வென்றோம். இடைக்கால தீர்ப்பில் ஆணையத்தை போட வேண்டும் என்றோம். அதுவும் தேவையில்லை என்றார்கள். அதையும் வென்று காட்டினோம்.

இறுதி தீர்ப்பு வந்தது. அதனை கெசட்டில் போட மாட்டேன் என்றார்கள். அதையும் போராடி கெசட்டில் போட வைத்தோம். இப்படி ஒவ்வொரு முறையும் போராடி, கடைசியில் தீர்ப்பாயம் தீர்ப்புக்கு பிறகு, ஒரு காவிரி ஆணையம் போட வேண்டும் என்றோம். பின்னர் அதனை போட்டார்கள். போட்டதற்கு பின்னர் தலைவர் போட மாட்டேன் என்று சொன்னார்கள். பின்னர் தலைவர் போட்டார்கள். அதிலே வாதாடினோம். இப்படி ஒவ்வொரு முறையும் நாம் அல்ல. நம்மை வளர்த்த தலைவர்கள் எல்லாம் இதில் ஈடுபட்டு இந்த பெரிய காரியத்தை செய்து இருக்கிறார்கள். எனக்கு இருக்கின்ற எண்ணம் எல்லாம் அண்ணோவோடும், மற்ற தலைவர்களோடும் நாம் இருந்தோம். வளர்த்தார்கள். இந்த பிரச்னை நமக்கு தெரியும். நம்மையும் மீறி போனால், எனக்கு இருக்கின்ற எண்ணம் நமது மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை இந்த பிரச்னை போகுமோ என்று பார்க்கிறேன்.அதனை எதிர்க்கும் சக்தி, அதற்கு இருக்கின்ற வீரியம், அவர்களுக்கு எல்லாம் இருக்குமா என்று நான் சந்தேகப்படுகிறேன். காரணம் எந்த நிலையில் எதிர்க்கலாம் என்று இருக்கிறார்கள்.

நான் 1989ல் இருந்து இந்த காவிரி பிரச்னையில் இருந்தவன். என்னுடைய காலத்தில் தான் என்னிடம் தலைவர்கள் ஒப்படைத்தார்கள். கடைசி வரை இதனோடு இணைந்து இருந்தவன். அந்த ஏக்கத்தோடு கேட்கிறேன். நமக்குள் ஆயிரம் இருக்கலாம். நீங்கள் யோக்கியனா. நாங்கள் யோக்கியனா என்று சண்டை பிடிக்கலாம். கடைசியில் கேட்கிறேன். நான் உள்பட காவிரி பிரச்னையில் நீ என்ன பண்ணின, நான் எண்ண பண்ணின என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று பணிவோடு கேட்டு கொள்கிறேன். நானே கூட தவறை செய்து இருக்கிறேன். நான் இல்லை என்று சொல்லவில்லை. எண்ணி பார்க்கிற போது, படிக்கின்ற போது உள்ளப்படியே இந்த பிரச்னையில் ஈடுபட்டவன் என்ற முறையில் மனம் கனத்து போனது. என்ன பிரச்னைக்கு போனாலும் கீழே ஒரு வழியை ஏற்படுத்தி வருகிறார்கள்.கன்னியாகுமரி முதல் எங்கள் வேலூருக்கு வந்தால் பாலாறு ஓடுகிறது. இந்த பக்கம் போனால் ஆரணி ஆறு ஓடுகிறது. கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இத்தனை ஆறுகள் ஓடுகிறது தவிர, நாம் தண்ணீருக்கு கையெந்தும் நிலையில் இருக்கிறோம். ஓரு பக்கத்தில் கேரளாவோடு போராட்டம். இன்னொரு பக்கம் கர்நாடத்தோடு போராட்டம். ஆந்திராவில் கேட்ட நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆக இந்த தமிழ்நாடு தண்ணீர் பெறுவதற்கே ஒரு போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறோம்.

உச்ச நீதிமன்றத்துக்கு மேலே எதுவும் உண்டா. ஒரு தனி மனிதன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டேன் என்று சொன்னால், சட்டம் சும்மா விடாது. ஒரு மாநிலமே சொல்கிறது என்றால் கேட்க வேண்டாமா. இவர்கள் மட்டுமல்ல, கேரளத்திலும் இப்படி தான் நடக்கிறது. நம்மை பொறுத்தவரை போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதில் நாம் தோற்று போனால், வரும் காலம் சமுதாயம் நம்மை காரிதுப்பும். சபிக்கும். இந்த நேரம் நமக்கு சரியான நேரம். அதனால் சொல்கிறேன். நம்முடைய உரிமையை நாம் பெற்றிட வேண்டும். அதற்காக படையெடுக்க முடியாது. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கலாம். ஒன்னும் பண்ண முடியாது. கடிதம் எழுதலாம். கலைஞர் எழுதினார். ஜெயலலிதா எழுதினார். எடப்பாடி எழுதினார். மு.க.ஸ்டாலின் எழுதினார். பார்க்கிறேன் என்று சொல்வார்கள். போய் பார்ப்பார்கள். நீங்கள் போங்க நாங்கள் பார்த்து கொள்வோம் என்று சொல்வார்கள். ஒன்றிய அரசாங்கம் சேர்ந்து, அது எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் சரி அவர்கள் தமிழ்நாட்டை மாற்றந்தாய் மனப்பான்மையோடு தான் பார்க்கிறார்கள்.

அது கூட்டாளியாக இருக்கும் காங்கிரசாக இருந்தாலும், இன்றைக்கு இருபவர்களாக இருந்தாலும் சரி. ஆகையால் இத்திட்டத்தை எப்படி போராடுவது என்பது, ஒன்று சட்டப்படி தான் நாம் செய்ய வேண்டும். காரணம், அண்டை மாநிலம். எனக்கு ஒரே நப்பாசை மட்டும் இருக்கிறது. நான் கிட்டத்தட்ட 10, 15 முதல்வரோடு பேசியிருக்கிறேன். முதல்வராக இருந்த கிருஷ்ணா தமிழ்நாட்டுக்காக குரல் கொடுத்தவர். பொம்மை கொஞ்சம் கோபமாக பேசினாலும், அவரது தந்தை ஜனநாயகத்தை காப்பாற்றிய ஒரு பெருமகன். காரணம் ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு ஆட்சியை இரவில் கலைக்க முடியும். அந்த காட்டு தர்பார் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பொம்மை. அவருடைய மகன் அந்த ஜனநாயகத்தை மதிப்பார் என்று கருதுகிறேன். இன்றைக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Cauvery ,Water Resources ,Minister ,Duraimurugan , My mind is heavy on the pain of whether the Cauvery struggle will last till the grandson, the grandson: Water Resources Minister Duraimurugan speaks in the Assembly
× RELATED காவிரி உரிமையை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு