×

நிதி சிக்கலில் நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி பேட்டி

சென்னை: நடிகர் சங்கம் நிதி சிக்கலில் இருப்பதாக நடிகர் கார்த்தி கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, மேல்முறையீடுகள் என இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விஷால் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர்.

மீண்டும் பொருளாளராக தேர்வான கார்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: 2015 முதல் 2019 வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான நாட்கள். எங்கள் அணியினர் சொந்த வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள். அதனால் கிடைத்துள்ள வெற்றி, 2 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் எங்கள் பதவிக் காலம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் 3 ஆண்டுகள் எங்களுக்கு கிடைத்துள்ளது. கட்டிடத்தை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே எங்கள் முதல் இலக்காக இருக்கும். காரணம் அதிலிருந்து வரும் வருமானம் தான் எதிர்கால சந்ததிக்கு உதவப்போகிறது. சங்கத்திற்கு நிறைய நிதி சிக்கல்கள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றாக சரி செய்யப்படும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்போம் என்றார்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கும் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘போராட்டம் நீண்டதாக இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெல்லும் என்பது நிரூபணமாகி உள்ளது. சட்டத்தின் மீது நம்பிக்கையும், மதிப்பும் அதிகரித்துள்ளது. உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் நீதித்துறை, காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது கனவு திட்டமான நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Karthi ,Actors' Guild , Interview with Karthi, Treasurer, Actors' Guild on Financial Issue
× RELATED மோடியை வீட்டுக்கு அனுப்ப கை...