×

தஞ்சை நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு: அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் தகவல்

தஞ்சை: புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 17ம் நூற்றாண்டு முதல், நாதஸ்வரம் என்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1955ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினைக் கலைஞர், நாதஸ்வரத்தில் “சுத்த மத்தியமம் ஸ்வரத்தை கண்டுபிடித்து அதை நாதஸ்வர கருவியில் உருவாக்கினார். இந்த இசைக்கருவியை எளிதாக இசைக்க முடிந்தது. இதனால் தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என பெயர் வந்தது. தற்போது இந்த நாதஸ்வரம் கருவி 158 நாடுகளில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இந்த இசைக்கருவியை கொண்டு வாசித்த ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாச்சலம் உள்பட புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்களும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை வாசித்து பெரும் புகழ் பெற்றனர். ராஜரத்தினம் பிள்ளை பேரும் புகழும் அடைய நாதசுரம் அறிவினை வளர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தந்தையார் முத்துவேல் ஆவார். எனவே இந்த நாதஸ்வரம் திராவிடர்களின் இசைக்கருவி என அழைக்கப்படுகிறது.

நரசிங்கம்பேட்டையில் ஆச்சா மரங்களை கொண்டு நாதஸ்வரத்தை சுமார் 15 குடும்பத்தினர் தற்போது வடிவமைத்து வருகின்றனர். பல்வேறு சிறப்புகள் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜன.31 புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்துக்காக விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு ஆவணங்களை சான்றாக வழங்கி, தொடர்ந்து 8 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர் தற்போது புவிசார் குறியீடுக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது.இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 46 பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து 10 பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.


Tags : Tanjai Narasingampeta Nathaswarat ,Intellectual Property Association , Geographical code for Tanjore Narasingampet Nathaswaram: Intellectual Property Corporation Lawyer Info
× RELATED அறிவுசார் சொத்துரிமை சங்கதலைவர்...