×

மணிப்பூர் மாநில முதல்வராக 2ம் முறையாக பிரேன் சிங் பதவியேற்பு: ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!!

இம்பால்:மணிப்பூர் மாநில முதல்வராக இரண்டாம் முறையாக பதவியேற்றார் பிரேன் சிங். நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில், பஞ்சாபை தவிர உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜ கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் பணிகளை பாஜ தொடங்கியது. முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக தலைநகர் இம்பாலில் நேற்று சட்டமன்ற கட்சி கூட்டம் நடந்தது. மேலிட பார்வையாளர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற கட்சி தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்பட்டது. ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 2வது முறையாக பிரேன் சிங், முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் இல.கணேசன், பதவிபிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவருடன் அமைச்சர்களாக 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.இந்த பதவியேற்பு விழாவில், பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாஜகவின் மணிப்பூர் பிரிவுத் தலைவர் அதிகாரி மயூம் ஷர்தா தேவி, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Brian Singh ,Manipur Chief Minister ,Governor ,Ila Ganesan , Manipur, Brian Singh, Inauguration, Governor Ila Ganesan
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...