×

முதுகுளத்தூர் பகுதியில் பருத்தி விளைச்சல் ஜோரு-விவசாயிகள் குஷி

சாயல்குடி : முதுகுளத்தூர் பகுதியில் கண்மாய், குளத்தில் கிடக்கும் தண்ணீரை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட பருத்தி மகசூல் நிலையை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.முதுகுளத்தூர் வட்டாரத்தில் கடந்தாண்டு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகியது. பருவமழையை நம்பி முதல் போகமாக நெல், பருத்தி, மிளகாய் பயிரிடப்பட்டது. மகசூலுக்கு பிறகு அறுவடை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கீழத்தூவல், கீழகன்னிச்சோரி, சவேரியார்பட்டணம், கேளல், பெருங்கரணை, மீசல், மகிண்டி, காக்கூர், புளியங்குடி, கருமல், பூக்குளம், இளஞ்செம்பூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் கிடந்த தண்ணீரை பயன்படுத்தி பருத்தி பயிரிடப்பட்டது. சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டவை, தற்போது நன்றாக விளைந்து பூத்து, காய் காய்த்து வருகிறது. விவசாயிகள் செடிகளுக்கு உரம் இடுதல் போன்ற பராமரிப்பு பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பூக்குளம் விவசாயிகள் கூறும்போது, தற்போது விளைவிக்கப்பட்ட பருத்திக்கு கண்மாயிலிருந்து பம்பு செட் குழாய் மற்றும் சில இடங்களில் போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், உரம் இடுதல் போன்ற பராமரிப்பு பணிகளை முறையாக செய்து வருகிறோம். நன்றாக வளர்ந்து பூத்து, காய், காய்த்து மகசூல் நிலையை எட்டியுள்ளது. ஓரிரு வாரங்களில் காயிலிருந்து பஞ்சு வெடித்து விடும். மேலும் பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல் செலவு, பருத்தி பஞ்சை பறிப்பதற்கு கூலியாக ரூ.250 முதல் ரூ.300 வரை கொடுக்கும் செலவு போன்றவற்றால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

ஆனால் வெளி மார்க்கெட்டில் கிலோ ஒன்றிற்கு ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே வாங்கப்படுகிறது. இது போதிய விலையாக இல்லாததால் கட்டுபடியாகவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் போதிய விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யவதற்கு அந்தந்த பகுதியில் தற்காலிக நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், என்றனர்.

Tags : Mudukulathur ,Joru ,Kushi , Sayalgudi: Yield of cotton produced using pond water in Mudukulathur area
× RELATED முதுகுளத்தூர்- அபிராமம் சாலை...