×

உயர்மின் கோபுரம் அமைத்ததற்கு உரிய இழப்பீடு கேட்டு 2 நாட்களாக விடிய விடிய விவசாயிகள் போராட்டம்-வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி : வந்தவாசி அடுத்த பாஞ்சரை கிராமத்தில் உயர் மின்கோபுரம் அமைத்ததற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய விசாயிகள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயர்மின் கோபுரத்தின் மீது ஏறியதால்   பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம், திருவலம், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக அரியலூர் மாவட்டம் வரை உயர் மின்கோபுர பாதை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாஞ்சரை வழியாக செல்கிறது.

இந்த மின் பாதைக்காக விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரத்திற்கான இடத்திற்கு பவர் கிரிட் நிறுவனம் கடந்த 3 வருடங்களாக இழப்பீடு வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பாஞ்சாரை   கூட்ரோட்டில் உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம்  காலை 10 மணி முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். அப்போது  அஙகேயே சமைத்து உணவருந்தி போராட்டம்  நடத்திய விவசாயிகள், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் அன்று நள்ளிரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று காலையும்  போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனை அடுத்து அங்கு வந்த தாசில்தார் வ.முருகானந்தம் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி  அடைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திடீரென அருகிலிருந்த உயர்மின் கோபுரம் மீது ஏறத் தொடங்கினர். உடனே போலீசார் ஓடிச் சென்று அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை. விறுவிறுவென  உயர்மின் கோபுரம் மீது சங்க கொடியுடன் ஏறிய சுமார் 6 பேர்,  விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தினர் உயர்மின் கோபுரம் மீதிருந்து இறங்கினர். எங்களுக்கான உரிய இழப்பீடு கிடைக்காதவரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு தாசில்தார் புறப்பட்டு சென்றார். இருப்பினும், விவசாயிகள் அங்கிருந்து செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று இரவிலும் விடியவிடிய போராட்டம் தொடர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Vidya , Vandavasi: Vandavasi has been demanding for 2 consecutive days to pay compensation for the construction of a high tower in the next Pancharai village.
× RELATED திருச்சியில் சிக்கிய ரூ.1 கோடி அதிமுக...