சிவகிரி அருகே கேரள வாலிபர் உடல் கண்மாயில் மீட்பு-கொலையா? என போலீசார் விசாரணை

சிவகிரி : சிவகிரிக்கு வடக்கே தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே அய்யனார் கோயிலுக்கு பின்புறம் பெரியகுளம் கண்மாய் உள்ளது. அந்த கண்மாயில்  வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.இதுகுறித்து தலையாரி வேல்முருகன், சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்த நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மேலபுத்தன் வீடு பகுதியை சேர்ந்த வேலு கோபு மகன் வினோத் என்ற சங்கர்(40) என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலத்தில் ஷேர் மார்க்கெட்டிங் தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் கேரளாவில் இருந்து சிவகிரிக்கு  எதற்காக வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் வந்த கார், மொட்டைமலை பகுதி அருகே நின்று கொண்டிருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். கேரளா வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: