×

ஜவ்வாதுமலை பகுதியில் பரபரப்பு 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு-5 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

திருவண்ணாமலை : ஜவ்வாதுமலைப் பகுதியில் எஸ்பி தலைமையில் நடந்த சோதனையில், 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் 5 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவண்ணாமலை மாவட்டம்,  போளூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் தலைமையில், ஏஎஸ்பி கிரண்சுருதி, போளூர் டிஎஸ்பி குணசேகரன், கலால் டிஎஸ்பி ராஜன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி ஆர்.ரமேஷ் ஆகியோர் உள்ளிட்ட போலீஸ் படையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில், நம்மியம்பட்டு மலைப்பகுதியில் 1,600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும், பால்வாடி பகுதியில் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

மேலும், ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்ட 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், 7 பேருக்கு தொடர்புடையதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே, தலைமறைவாக உள்ள 7 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும், கள்ளச்சாராய தொழிலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Javadumalai , Thiruvannamalai: In an SP-led raid in the Javadumalai area, 2,200 liters of counterfeit liquor was destroyed. And more5
× RELATED அரசு பஸ்சை மடக்கி வட்டமடித்த யானை; பயணிகள் திக்…திக்…திக்…