×

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஞ்சாப்பிற்கு 555 டன் பருத்தி விதைகள் ரயிலில் அனுப்பி வைப்பு-கோட்டத்திற்கு ₹30.41 லட்சம் வருவாய்

சேலம் : சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பஞ்சாப்பிற்கு 555 டன் பருத்தி விதைகள் சிறப்பு பார்சல் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் சேலம் கோட்டத்திற்கு ₹30.41 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சரக்குகள் கையாள்வதை அதிகரிக்க, கோட்ட வணிக மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர், விவசாய விளை பொருட்கள் மற்றும் விதைகள், பால் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு பார்சல் ரயில்கள் மூலம், வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து பருத்தி விதைகளை பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு அனுப்பி, வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த வகையில், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேற்று, பஞ்சாப் மாநிலம் பத்திண்டா ஸ்டேஷனுக்கு சிறப்பு பார்சல் ரயிலில் பருத்தி விதைகள் அனுப்பி வைக்கப்பட்டது. வாழப்பாடி, ஆத்தூர் பகுதியில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட பருத்தி விதைகளை 33,341 பண்டல்களாக 22 பார்சல் பெட்டிகளில் ஏற்றினர்.

மொத்தமாக 555.9 டன் பருத்தி விதைகள் ஏற்றப்பட்டன. பிறகு, இந்த சிறப்பு பார்சல் ரயில் பஞ்சாப்பிற்கு புறப்பட்டுச் சென்றது. இப்பார்சல் ரயில் இயக்கப்பட்டதன் மூலம், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு ₹30.41 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தற்போது பருத்தி விவசாயம் செய்யும் காலம் என்பதால், இன்னும் சில பார்சல் ரயில்களில் பருத்தி விதைகளை அனுப்பி வைக்க இருப்பதாகவும், இதற்காக சேலம் மாவட்டத்தில் இருந்து பருத்தி விதைகளை விற்பனை செய்யும் பல்வேறு நிறுவனங்கள், வியாபாரிகளிடம் வணிக மேம்பாட்டுக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரயில்வே சரக்கு போக்குவரத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தர இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Salem Railway Station ,Punjap , Salem: 555 tonnes of cotton seeds were sent by special train from Salem railway station to Punjab. Through this Salem
× RELATED சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் திட்டம் ரத்து: ஒன்றிய அரசு முடிவு