×

தாராபுரம் வங்கியில் ரூ.18 லட்சத்திற்கு அடகு வைத்த 1850 நெல் மூட்டைகள் கொள்ளை விவசாயி உட்பட 3 பேர் கைது

தாராபுரம் :  தாராபுரம் வங்கியில் ரூ.18 லட்சத்திற்கு அடகு வைத்த 1850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்து விற்ற விவசாயி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விவசாயி ராஜ்குமார். இவர், கடந்தாண்டு தாராபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் 1850 நெல் மூட்டைகளை அடமானமாக வைத்து ரூ.18 லட்சத்தை  பொருள் ஈடு கடனாக பெற்றார்.

இந்த 1850 நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஈரோடு பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.சி.எம்.எல். நிறுவனத்திடம் வங்கி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். அந்த நிறுவனம் தாராபுரம் தட்சன்புதூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கிடங்கை வாடகைக்கு எடுத்து அங்கு 1850 நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது. இந்த குடோனை கண்காணிக்க எஸ்.சுரேஷ்குமார், எம்.சுரேஷ் குமார் ஆகிய இருவரை என்.சி.எம்.எல். நிறுவனம் நியமித்திருந்தது. இந்நிலையில், குடோனிலிருந்த 1850 நெல் மூட்டைகளை கடன் பெற்ற விவசாயி ராஜ்குமார் மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் எம்.சுரேஷ் குமார் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து நெல் மூட்டைகளை கொள்ளை அடித்து சென்று விற்றனர்.

ஆனால், நெல் மூட்டைகள் குடோனில் இருப்பதாக குடோன் கண்காணிப்பாளர்கள் இருவரும் கண்காணிப்பு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர். இதற்காக, வங்கி நிர்வாகத்தினர் மாதந்தோறும் அவருக்கு சம்பளம் வழங்கி வந்தனர். இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் நெல் குடோனை ஆய்வு செய்ய வந்த வங்கி ஊழியர்கள் நெல் மூட்டைகள் இல்லாததால் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் என்.சி.எம்.எல். மேலாளர் தேவராஜிடம் புகார் செய்தது.

மேலும், குடோன் கண்காணிப்பாளர்கள் எஸ்.சுரேஷ் குமார் மற்றும் எம்.சுரேஷ் குமார் விவசாயி ராஜ்குமார் ஆகியோர் நெல் மூட்டைகளை கொள்ளை அடித்துவிட்டதாக அவர்கள் மீது தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நெல் மூட்டைகளை கொள்ளை அடித்த குடோன் மேலாளர்கள் மற்றும் விவசாயி  ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க தாராபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்படி, தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விவசாயி ராஜ்குமார், எஸ்.சுரேஷ்குமார், எம்.சுரேஷ்குமார் நெல் மூட்டைகளை கொள்ளை அடித்து விற்றதை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, 3 பேரையும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார். வங்கியில் கடன் பெற்று கொண்டு அடமானமாக வைத்த நெல் மூட்டைகளை விவசாயி மற்றும் குடோன் கண்காணிப்பாளர்கள் 2 பேர் கொள்ளையடித்த சம்பவம் தாராபுரம்  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Tarapuram Bank , Dharapuram: Three persons, including a farmer, were arrested for robbing and selling 1850 bundles of paddy worth Rs 18 lakh in Dharapuram bank.
× RELATED வங்கியில் ரூ.18 லட்சத்துக்கு அடகு 1850...