வங்கக் கடலில் இன்று உருவாகிறது அசானி புயல்..மார்ச் 22 ம் தேதி கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : அந்தமான் அருகே உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிக்கோபர் தீவுகளுக்கு 200கிமீ வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியிலும் அந்தமான் தீவுகளுக்கு 100 கிமீ தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதற்கு அடுத்த 12 மணி நேரத்திலும் புயலாக வலுபெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது. அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்காளதேச கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா தெரிவித்துள்ளார்.

புயல் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், வடக்கு மியான்மர்- வங்கதேசம் இடையே கடலோர பகுதியில் மார்ச் 22 ம் தேதி கரையை கடக்கும். இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான் - நிக்கோபர் தீவுகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக அந்தமானில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 85 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்ல இருந்த 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னை, எண்ணூர், கடலூர், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Related Stories: