×

உத்தராகண்ட் முதலமைச்சர் பதவியை பிடிக்க போட்டா போட்டி: கோவா முதலமைச்சர் யார்?.. திணறும் பாஜக..!

டொராடூன்: தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் ஆகியும் இழுபறி நீடிக்கும் கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களை பாஜக இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே யோகி ஆதித்யநாத், மீண்டும் முதலமைச்சர் என உறுதியாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்ற மாநிலங்களில் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது.

இதன் காரணமாக முடிவு வெளியாகியும் 2 வாரங்கள் ஆக முதலமைச்சரை தேர்வு செய்ய முடியாமல் பாஜக தலைமை திணறியது. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பைரேன் சிங் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். உத்தரகாண்டில் மூத்தமுள்ள 70 இடங்களில் 40 தொகுதிகளை கைப்பற்றி பாஜக பெரும்பான்மை பெற்ற போதிலும் முதலமைச்சரை தேர்வு செய்ய முடியவில்லை. அங்கு ஏற்கனவே முதலமைச்சராக உள்ள புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்ததால் அந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

நேற்று நடைபெறுவதாக இருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். இதேபோல கோவாவில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்த பாஜக கட்சியில் மீண்டும் யார் முதல்வர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இன்று மாலை நடைபெறும் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்கள், பொறுப்பாளர்கள், கலந்துகொள்ள உள்ளனர். அதில் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Bota ,Chief Minister ,Uttarakhand ,Goa , Potta contest for Uttarakhand Chief Minister's post: Who is Goa's Chief Minister? .. BJP suffocating ..!
× RELATED பேருந்தில் பயணிகளை ஏற்றுவதில் போட்டா...