×

நதாலியே ரூத் சைவர் அபார ஆட்டம்; நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது

ஆக்லாந்து: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஓரளவு தாக்குப்பிடித்த முன் வரிசை வீராங்கனைகள் சூஸி பேட்ஸ் 22, கேப்டன் சோபி டிவைன் 41, அமெலியா கெர் 24, அமி சாட்டர்த்வெய்ட் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் மேடி கிரீன் உறுதியுடன் விளையாடி அரை சதம் அடிக்க, அடுத்து வந்த 5 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது நியூசிலாந்துக்கு பின்னடைவை கொடுத்தது. ஜெஸ் கெர் 14 ரன் எடுத்து ரன் அவுட்டானார்.

நியூசிலாந்து 48.5 ஓவரில் 203 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மேடி கிரீன் 52 ரன்னுடன் (75 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் கேட் கிராஸ், சோபி எக்லெஸ்டோன் தலா 3, சார்லி டீன் 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 47.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து வென்றது.

நதாலியே ரூத் சைவர் அதிகபட்சமாக 61 ரன் (108 பந்து, 5 பவுண்டரி) விளாசினார். கேப்டன் ஹீதர் நைட் 42, பியூமான்ட் 25, சோபியா டங்க்லி 33 ரன் எடுத்தனர். சார்லி டீன் (0), அன்யா ஷ்ரப்சோல் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் பிரான்செஸ் மெக்கே 4, ஜெஸ் கெர் 2, லீ டஹுஹு, புரூக் ஹாலிடே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நதாலியே சைவர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஹாட்ரிக் தோல்வியுடன் சோர்ந்து போயிருந்த அந்த அணி இந்தியா, நியூசிலாந்து அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி 4 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.



Tags : Natalie Ruth Cyver ,England ,New Zealand , Natalie Ruth Cyver great game; England beat New Zealand: Retains semi-final chance
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.