×

தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே 29 கி.மீ கடலை 13 மணி நேரத்தில் கடந்து மாற்றுத்திறன் சிறுமி சாதனை

ராமேஸ்வரம்: மும்பையில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் மதன்ராயின் மகள் ஜியா ராய் (13). ஆட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி, அங்குள்ள நேவி குழந்தைகள் பள்ளியில் படித்து வருகிறார். இவர் இலங்கையின் தலைமன்னார் - தனுஷ்கோடி அரிச்சல்முனை இடையில் 29 கிமீ தூரமுள்ள பாக் ஜலசந்தி கடலை நீந்திக்கடப்பதற்காக ஒன்றிய அரசு வெளியுறவுத்துறையின் சிறப்பு அனுமதி பெற்றார்.

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகில் தலைமன்னார் புறப்பட்டு சென்றார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சிறுமி ஜியா ராய்  தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்தத் துவங்கினார். இலங்கை கடல் பகுதிக்குள் இலங்கை கடற்படையினர்
கண்காணித்தனர்.

ஒரு படகில் சிறுமியின் தந்தை மதன்ராய், மருத்துவக்குழுவினர், நீச்சல் பயிற்சியாளர் உள்ளிட்டோர் சென்றனர். நடுக்கடலில் உடல் சோர்வை தவிர்க்க கொடுக்கப்பட்ட பானங்களை நீந்தியபடியே ஜியா ராய் அருந்தினார். இந்திய கடல் எல்லைக்குள் வந்தவுடன் இந்திய கடலோர காவல்படையினர் கோஸ்ட் கார்டு ஹோவர்கிராப்ட் கப்பலிலும், ரோந்து படகில் மரைன் போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அதிகாலையில் நீந்தத்துவங்கிய சிறுமி இடைவிடாது நீந்தியபடியே நேற்று மாலை 5.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை வந்தடைந்தார். தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே 29 கிமீ கடல் தூரத்தை 13 மணி நேரத்தில் நீந்திக்கடந்து ஜியா ராய் சாதனை படைத்தார்.

கரையேறிய சிறுமியை அங்கு கூடியிருந்த  சுற்றுலாப் பயணிகளும், மீனவர்களும் ஆராவாரம் செய்து வரவேற்றனர். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறுமியின் சாதனையை பாராட்டி மயில் சிலையை பரிசாக வழங்கினார். இச்சிறுமி, சமீபத்தில் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ராஷ்ட்ரிய பால் புரோஷ்கார் விருது உட்பட பல விருதுகளும், 24 தங்க மெடல்களும் வாங்கியுள்ளாது குறிப்பிடத்தக்கது.

Tags : Talaimannar ,Dhanushkodi , Talaimannar- Dhanushkodi crossing 29 km in 13 hours
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்