மெரினா காமராஜர் சாலையில் பைக் சாகசம் செய்த 14 வாலிபர்கள் கைது: 7 பைக்குகள் பறிமுதல்

சென்னை: மெரினா காமராஜர் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபட்ட 14 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நள்ளிரவு நேரத்தில் சர்வீஸ் சாலையில் செல்ல அனுமதியில்லை, என்று கூறி அவர்களை வெளியேற்றினர். அப்போது போலீசாரிடம், நாங்கள் சர்வீஸ் சாலையில்தான் செல்வோம், என அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

அதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், வேறு வழியின்றி 20 வாலிபர்களும் தங்களது பைக்கில் மெரினா காமராஜர் சாலைக்கு சென்றனர். பின்னர் திடீரென அனைவரும் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.  இதனால் காமராஜர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதை வாலிபர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இதுபற்றி அறிந்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போலீசாரின் தடையை மீறி பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மேற்பார்வையில் 4 உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி 4 தனிப்படை போலீசார் வீடியோ பதிவில் உள்ள வாகன பதிவு எண்களை வைத்து, பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 14 வாலிபர்களை கைது செய்து 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.  மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 14 வாலிபர்களிடம் தனிப்படை போலீசார் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: