×

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் பயோ மைனிங் முறையில் மறுசுழற்சி பணிகள்: தலைமை செயலர் ஆய்வு

சென்னை: பெருங்குடி  குப்பை கொட்டும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உயிரி  அகழ்ந்தெடுத்தல் (பயோ மைனிங்) பணியினை தலைமை செயலர் இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.   இந்த திடக்கழிவுகள் மக்கும், மக்காத கழிவுகளாக பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.  மீதமுள்ள கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

225 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 34.02 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை கழிவுகள் உள்ளது. இதனை பயோ மைனிங் முறையில் மறுசுழற்சி செய்யும் பணி ₹350.65 கோடி மதிப்பில், 11 உயிரி அகழ்ந்தெடுக்கும் மையங்களின் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், குப்பை குவியலில் உள்ள கல், மணல், இரும்பு, மரக்கட்டைகள், கண்ணாடி, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று ஆய்வு செய்த தலைமை செயலர் இறையன்பு, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை  நிறைவு செய்ய வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, பள்ளிக்கரணையில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் திடக்கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து பண்டல்களாக மாற்றும் இயந்திரத்தின் செயல்பாடுகளையும், மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மைக்ரோ கம்போஸ்ட் மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில்  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில்  திரு.வி.க. நகர் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை மற்றும் கோட்டூர்புரம் பாலம் முதல் மறைமலை அடிகளார் மேம்பாலம் வரை இருபுறங்களிலும் ₹14.2 கோடி மதிப்பில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள், திரு.வி.க. நகர் பாலம் முதல் எம்ஆர்டிஎஸ் பாலம் வரை ₹5.4 கோடி மதிப்பிலும், எம்ஆர்டிஎஸ் பாலம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ₹5.8 கோடி மதிப்பிலும் நடைபாதை அமைத்தல் மற்றும் மரங்கள் நடுதல் போன்ற பணிகளையும் தலைமைச் செயலர் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகளை நடவு செய்தார்.

அடையாறு ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் 2350 மீட்டர் நீளத்திற்கு 60,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை  22,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.  மீதமுள்ள மரக்கன்றுகள் நடும் பணிகளையும் விரைந்து மேற்கொள்ள  தலைமை செயலர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர்.சிவ்தாஸ் மீனா,   சென்னை மாநகராட்சி ஆணையர்  ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையர் மனிஷ் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Tags : Chief Secretary , Bio-Mining Recycling Tasks at the Tribal Garbage Dump: A Chief Secretary's Review
× RELATED தடையின்றி குடிநீர் விநியோகம், கோடைகால...