×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விவகாரம் ஓபிஎஸ், இளவரசி இன்று நேரில் ஆஜராக உத்தரவு: மீண்டும் சூடுபிடித்தது ஆறுமுகசாமி ஆணைய விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணத்தில் ஓபிஎஸ் உட்பட பலரும் சந்தேகத்தை கிளப்பினர். குறிப்பாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தான் முதல்முதலில் குரல் கொடுத்தார். இதையேற்று கடந்த 2017ல் செப்டம்பர் மாதத்தில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், வீட்டில் வேலை செய்த பணியாளர்கள் உட்ப அனைவரிடமும் விசாரணை நடத்தினர். 95 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில், ஜெயலலிதா இறக்கும் போது முதல்வராக இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் சார்பில் பலமுறை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஆணையத்தின் சம்மன்படி ஒரு நாள் கூட ஓபிஎஸ் நேரில் ஆஜராகவில்லை. இதனால் விசாரணையில் மந்தநிலை ஏற்பட்டது.

இதற்கிடையே நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் கடந்த 2019 ஏப்ரல் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை ஆணையத்திற்கு எதிராக இடைக்கால தடைபெற்றது. இதனால், ஆணையம் அந்த ஆண்டில் இருந்து முடங்கியது.
இந்த சூழலில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவின் முன்னிலையில் கடந்த 7ம் தேதி 5 பேரிடமும், 8ம்தேதி 4 அப்போலோ டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக விசாரணை ஆணையம் சார்பில் பதிவும் செய்யப்பட்டது. மேலும் கடந்த 15ம் தேதி நடந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 3 முக்கிய டாக்டர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அதைதொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணையாக ஜெயலலிதா மரணத்தில் சந்தகம் கிளப்பிய அப்போதைய முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலிதாவுடன் 75 நாட்கள் உடன் இருந்து சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடம் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது.

அதன்படி ஓபிஎஸ் மற்றும் இளவரசிக்கும் விசாரணை ஆணையம் சார்பில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி சம்மன் அனுப்பட்டது. அதன்படி இன்று நடைபெறும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையம் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல முறை விசாரணை ஆணையம் நேரில் ஆஜராக ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பியும் அவர் பல்வேறு காரணங்களை கூறி ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். எனவே, இந்த முறை விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் ஓபிஎஸ், விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவதில் கால அவகாசம் கேட்கக்கூடும் என்று அவரது வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள இளவரசி, ஜெயலலிதாவுடன் வீட்டிலும் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதும் உடன் இருந்தவர். இவருக்கு ஜெயலலிதா இறப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் தெரிந்திருக்க கூடும் என்று விசாரணை ஆணையம் நம்புகிறது.
எனவே, ஆணையம் முன்பு ஆஜராக உள்ள இளவரசியிடம் ஜெயலலிதாவின் இறப்பு குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முறை, ஜெயலலிதா 2016 செப்டம்பர் மாதம் 22ம் தேதி வீட்டில் இருந்து சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாரா? அல்லது சுயநினைவின்றி அழைத்து வரப்பட்டாரா? உடல் நிலை பாதிக்கப்பட்ட அன்று இரவு என்ன உணவு சாப்பிட்டார். கடைசியாக யாரிடம் பேசினார் என்பது உள்ளிட்ட 100க்கும் மேறப்பட்ட கேள்விகளை விசாரணை ஆணையம் இளவரசியிடம் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

ஓபிஎஸ் மற்றும் இளவரசியிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு, ஜெயலலிதா தோழி சசிகலா, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அப்போது அமைச்சர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி உட்பட பல முக்கிய பிரமுகர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

Tags : Former ,Chief Minister ,Jayalalithaa ,Princess , Former Chief Minister Jayalalithaa's death case: OBS, Princess ordered to appear in court today
× RELATED சொல்லிட்டாங்க…