×

சத்ரபதி சிவாஜி சிலை திறப்பில் தகராறு பாஜ-டிஆர்எஸ் கட்சியினர் மோதல் தெலங்கானாவில் பயங்கர கலவரம்: போலீஸ் தடியடி; கண்ணீர் புகை குண்டு வீச்சு

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்)  ஆட்சி நடைபெறுகிறது. அங்கு தனிப்பெரும் கட்சியாக விளங்கி வந்த டிஆர்எஸ்க்கு மாற்று சக்தியாக தற்போது பாஜ உருவெடுத்து வருகிறது. இதனிடையே, நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதான் பகுதியில் பாஜ சார்பில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் உருவச்சிலை நேற்று முன்தினம் இரவோடு, இரவாக அமைக்கப்பட்டது. இச்சிலையை பாஜ எம்பி அர்விந்த் தர்மபுரி நேற்று திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாஜவினர் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் அதை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.

பாஜ.வினர் மீது டிஆர்எஸ் தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பலர் காயமடைந்தனர். டிஆர்எஸ் தொண்டர்களுடன் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தொண்டர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர். பாஜவினரும் திரண்டு வந்து பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், கலவரம் ஏற்பட்டு அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

இது குறித்து தகவலறிந்த நிஜாமாபாத் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்களை கலைத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BJP ,TRS ,Chhatrapati ,Shivaji ,Telangana , BJP-TRS clash over Chhatrapati Shivaji statue unveiling Terrorist riots in Telangana: Police beat; Tear smoke bombing
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...