×

இசிஆர் சாலையில் பிரபல தனியார் ரிசார்ட்டில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற 36 இளம் பெண்கள் மாணவிகள் உள்பட 500 பேர் சிக்கினர்; போதையில் விடிய விடிய ஆட்டம்பாட்டம்; கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை: 5 பேர் அதிரடி கைது

சென்னை: தடை செய்யப்பட்டுள்ள மதுவிருந்தை கொண்டாடியதாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பண்ணை விடுதியில் இருந்த 500 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் 5 பேரை கைது செய்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீடுகள், திரையரங்குகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு மையங்கள், ரிசார்ட்கள் அதிகளவில் உள்ளன. இந்த பொழுதுபோக்கு மையங்களில் சட்டவிரோதமாக மது அருந்துதல், இரவு நேரங்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் போன்றவை  நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து, தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் ரவிக்கு ரகசிய தகவல் நேற்று நள்ளிரவு கிடைத்தது. இதனையடுத்து, அவரது உத்தரவின்பேரில், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய பிரமுகருக்கு சொந்தமான ரிசார்ட்டில் நேற்று அதிகாலை மதுவிலக்கு மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில், அங்கு சட்டவிரோதமாக மது விருந்து, ஆடல் பாடலுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்த 36 இளம்பெண்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 500 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களின் பெயர், முகவரி செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை போலீசார் பதிவு செய்தனர்.  பிடிபட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பிரபல தனியார் நிறுவன மேலாளர் சைமன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக தெரியவந்தது.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலரிடம் ₹1500 முதல் ₹2 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த ரிசார்டில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட் உள்பட பல்வேறு போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, தகலவறிந்ததும் தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் ரவி சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, பிடிபட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் இளம்பெண்களை போலீசார் எச்சரித்து, இனிமேல் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டோம் என உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவன மேலாளர் சைமன் உள்பட 5 பேரை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் கைது செய்து, இந்த ரிசார்ட்டில் போலீசாரின் உரிய அனுமதியுடன் நிகழ்ச்சியை நடத்தினார்களா என விசாரிக்கின்றனர்.

பின்னர் நிருபர்களிடம் கமிஷனர் ரவி கூறுகையில், ‘‘இதுபோன்ற ரிசார்டுகளில் வார விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மதுவிருந்து மற்றும் ஆடல் பாடல்களுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனால், பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட இளைய சமுதாயத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தவறு செய்யும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என உறுதி தெரிவித்தார். இச்சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags : ECR Road ,attambattam , 500 people were trapped, including 36 young female students attending a party at a popular private resort on ECR Road; Intoxication vidya vidya attambattam; Warning to college students: 5 arrested in action
× RELATED இசிஆர் சாலையில் உள்ள பயணியர்...