×

400க்கும் மேற்பட்டோர் பதுங்கியிருந்த பள்ளி மீது குண்டுவீசி தாக்குதல்: மரியுபோலை நாசமாக்கும் ரஷ்ய ராணுவம்

மரியுபோல்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் பள்ளி ஒன்றின் மீது ரஷ்ய ராணுவம் குண்டுவீசி பயங்கர தாக்குதல் நடத்தியது. அப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதுங்கியிருந்த நிலையில், அவர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே, நேற்று மீண்டும் மற்றொரு ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

உக்ரைனில் போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் 25வது நாளாக நேற்றும் தாக்குதலைத் தொடர்ந்தது. கடந்த 3 வாரங்களாக, துறைமுக நகரமான மரியுபோலை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவம் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு எந்த இடத்திலும் பொதுமக்கள் பதுங்க முடியாத அளவுக்கு நகரம் முழுவதும் குண்டுவீசி நாசம் செய்துள்ளது. இதனால் உக்ரைன் போரின் மிகப்பெரிய அடையாளமாக மரியுபோல் நகரம் மாறி உள்ளது. உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமலும் வெளியேற முடியாமலும் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அங்கு பொதுமக்கள் பதுங்கி உள்ள கட்டிடங்களையும் ரஷ்ய ராணுவம் தகர்த்து வருகிறது.

கடந்த புதன் கிழமை 1000 பேர் பதுங்கியிருந்த தியேட்டர் ஒன்றின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவம், நேற்று அதிகாலை மரியுபோல் பள்ளி கட்டிடத்தின் மீது குண்டுவீசியது. அந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதுங்கியிருந்தனர். குண்டுவீச்சில் பள்ளி தரைமட்டமாகி உள்ளது. அங்கு பதுங்கியிருந்தவர்கள் கதி என்னவானது என உடனடியாக எந்த தகவலும் இல்லை. ஏற்கனவே குண்டுவீச்சில் தகர்க்கப்பட்ட தியேட்டரின் கட்டிட இடிபாடுகளில் இருந்து 130 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் தற்போது பள்ளி கட்டிடம் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.

இதுவரை மரியுபோலில் மட்டும் 2,300 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களில் பலர் கட்டிட இடிபாடுகளில் புதைந்து பலியாகி இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளி கட்டிடம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ‘‘அமைதியான நகரத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் செய்த செயல் ஒரு பயங்கரவாதம். இந்த போர்க் குற்றம் நூற்றாண்டுகளுக்கும் நினைவில் இருக்கும்’’ என்றார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் முதல் முறையாக ஹைபர்சோனிக் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்திய ரஷ்யா நேற்றும் 2வது முறையாக மற்றொரு ஹைபர்சோனிக் ஏவுகணையை ஏவியதாக கூறி உள்ளது. கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள துறைமுக நகரமான மைகோலைவ் நகரை ஒட்டிய கோஸ்டியன்ட்னிவ்கா பகுதியில் ஏவப்பட்ட கின்சால் ஹைபர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைனின் எரிபொருள் கிடங்கு தகர்க்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகமாக செல்லக் கூடியது. சுமார் 2000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தகர்க்கக் கூடியது. இதை மிக் 31 விமானத்தில் இருந்து ஏவியதாக ரஷ்யா கூறி உள்ளது.

மேலும், காஸ்பியன் கடல் பகுதியில் ரஷ்ய போர் கப்பல்களில் இருந்து கேலிபிர் ஏவுகணை ஏவி செர்னிஹிவ் பிராந்தியத்தின் நிஸைனில் உள்ள ஆயுதங்கள் பழுதுபார்க்கும் ஆலை தகர்க்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறி உள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் மைகோலைவ் நகரின் கடற்படை ராணுவ முகாம் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 40 உக்ரைன் கடற்படை வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியும், வான்வழியாகவும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. கார்கிவ்வில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 வயது சிறுவன் உட்பட 5 பேர் பலியானதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை நடக்காவிட்டால் 3ம் உலகப் போர் ஏற்படக்கூடும்: போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். செய்தி டிவி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்த ஜெலன்ஸ்கி, ‘‘ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக உள்ளேன். பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது. இந்த போரை நிறுத்த ஒரு சதவீத வாய்ப்பு இருந்தாலும் அதை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால், இந்த முயற்சியும் தோல்வி அடைந்தால், அது 3ம் உலகப் போருக்கு வித்திடும்’’ என்றார்.

ரஷ்யாவுக்கு ஆதரவான 11 கட்சிகள் முடக்கம்: உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவான 11 எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை அதிபர் ஜெலன்ஸ்கி தற்காலிகமாக முடக்கி உத்தரவிட்டுள்ளார். இதில் 450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 44 சீட்களை பெற்றுள்ள முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான ‘ஆப்போசிஷன் பிளாட்பார்ம் பார் லைவ்’ கட்சியும் இடம் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் விக்டோர் மெட்வெட்சங்க், ரஷ்ய அதிபர் புடினுக்கு மிக நெருக்கமானவர் ஆவார். அதே போல, முராயேவ் தலைமையிலான நாஸி கட்சியும் தடைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஜெலன்ஸ்கிக்கு பதிலாக முராயேவைத்தான் உக்ரைன் அதிபராக்க ரஷ்யா விரும்புவதாக இங்கிலாந்து அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது. ராணுவ சட்டம் அமலில் இருக்கும் வரை இந்த 11 கட்சிகளின் செயல்பாடு முடக்கப்படுவதாகவும், முரண்பாடு மற்றும் எதிரிகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றியடையாது எனவும் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

தெருக்களில் சிதறியுள்ள ரஷ்ய வீரர்கள் சடலங்கள்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘உக்ரைன் எப்போதும் அமைதியான தீர்வையே நாடுகிறது. நாங்கள் இப்போதும் அமைதியை விரும்புகிறோம். கடுமையான போர்கள் நடந்த இடங்களில், ரஷ்ய வீரர்களின் உடல்கள் சாலைகளில் சிதறி கிடக்கின்றன. இந்த உடல்களை யாரும் சேகரிக்கவில்லை. தெற்கில் உள்ள சோர்னோபாய்வ்காவுக்கு அருகில் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் படைகள் 6 முறை தாக்கியது’ என்று கூறி உள்ளார்.

உக்ரைன் கொடி நிறத்தில் ரஷ்ய விண்வெளி வீரர்கள்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்த மூன்று ரஷ்ய விண்வெளி வீரர்கள், உக்ரைன் தேசிய கொடியான நீல மற்றும் மஞ்சள் நிற விமான உடைகளை அணிந்திருந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. விண்வெளி வீரர் ஒலெக் ஆர்டெமியேவ் கூறுகையில், ‘ஒவ்வொரு குழுவும் பயணத்தை தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில், உடைகள் தனித்தனியாக தைக்கப்பட வேண்டும். மூவரும் பாமன் மாஸ்கோ மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதால், அவர்கள் தங்கள் மதிப்புமிக்க அல்மா மேட்டரின் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்தனர்‘ என்றார். ஆனால், சுற்றுப்பாதை நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே, வேறுபட்ட பதிலைக் கூறினார். சேமிப்பில் நிறைய மஞ்சள் பொருட்கள் இருப்பதாகவும், அதனால் நாங்கள் மஞ்சள் அணிய வேண்டியிருந்தது’ என்று கூறினார்.

உக்ரைனுடன் புடின் தாக்குதல் நிற்காது : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு  உலகிற்கு ஒரு திருப்புமுனை. அதிபர் விளாடிமிர் புடினின் படைகளுக்கு வெற்றி என்பது, ‘ஒரு புதிய அச்சுறுத்தல் யுகத்தை’ அறிவிக்கும். வெற்றிபெற்ற புடின் உக்ரைனுடன் நிற்க மாட்டார். இது, ஜார்ஜியாவிலும் பின்னர் மால்டோவாவிலும் விரிவடையலாம். இது, கிழக்கு ஐரோப்பாவில் பால்டிக் முதல் கருங்கடல் வரை புதிய அச்சுறுத்தல் யுகத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்’ என்றார்.

Tags : Mariupol , Bombing of a school where more than 400 people were hiding: Russian army destroys Mariupol
× RELATED ‘சரணடையும் பேச்சுக்கே இடமில்லை’; ரஷ்யாவின் மிரட்டலுக்கு உக்ரைன் பதில்