தஞ்சாவூரில் உள்ள நடராஜன் நினைவிடத்தில் சசிகலா-டிடிவி.தினகரன் திடீர் மோதல்; தனித்தனியாக அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு

சென்னை: சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் இடையே எழுந்துள்ள மோதல் எதிரொலியாக தஞ்சாவூரில் உள்ள நடராஜன் நினைவிடத்தில் இருவரும் தனித்தனியாக அஞ்சலி செலுத்தினர். இதனால், அமமுக, அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார். சசிகலாவின் வருகையால் அமமுக கலைக்கப்பட்டு அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைகளில் சசிகலாவும், டிடிவி.தினகரனும் இணைந்து செயல்படுவார்கள் என தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், டிடிவி.தினகரன் தனித்து செயல்பட ஆரம்பித்தார். அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைகளில் சசிகலா மட்டுமே இறங்கினார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே டிடிவி.தினகரனுக்கும், சசிகலாவிற்கு இடையே மறைமுகமாக மோதல் நடைபெற்று வந்தது.

உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து சசிகலா எந்தவொரு செயல்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சசிகலாவின் இந்த நடவடிக்கைகள் டிடிவி.தினகரனுக்கு பெரும் பிரச்னையாக அமைந்தது. இதனால், சென்னையில் ஆலோசனை கூட்டத்தை கூட்டிய டிடிவி.தினகரன், சசிகலா நடத்தும் கூட்டங்களிலும், தனியாகவும் யாரும் சென்று சந்திக்க கூடாது என உத்தரவிட்டார். இதனால், இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. பொதுநிகழ்ச்சிகளில் கூட இருவரும் ஒன்றாக செல்வதை தவிர்த்தனர். இதேபோல், சசிகலா மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். கடந்த 4ம் தேதி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றார்.

இந்த மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்து தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்துப் பேசினார். இதனால், ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ், எடப்பாடி நடவடிக்கை எடுத்தனர். சசிகலா கடந்த 17ம் தேதி சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்றார். அப்போது, மாவட்டம் தோறும் அதிமுக முன்னாள் நிர்வாகிகளை சந்தித்தார். இந்தநிலையில், நடராஜனின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, டிடிவி.தினகரனும் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். இந்தநிலையில், இருவரும் ஒன்றாக சென்று நடராஜன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சசிகலாவும், தினகரனும் தனித்தனியே அஞ்சலி செலுத்தினார்கள். சசிகலாவுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஆகியோர் மட்டுமே இருந்தனர். மேலும், அமமுக நிர்வாகிகள் சசிகலா உடன் செல்வதை தவிர்க்கும் வகையில் தஞ்சாவூரில் பல்வேறு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நீர்மோர் பந்தல் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்றவற்றை கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஒரே இடத்தில் இருந்துகொண்டு சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் மோதல் போக்குடன் செயல்பட்டு வருவது அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: