வறட்சியின் கோரப்பிடியில் மேட்டுப்பாளையம் வனப்பகுதி குடிநீர், உணவு தேடி குன்னூருக்கு இடம் பெயரும் யானைக்கூட்டம்: தண்டவாளத்தில் முகாமிட்டுள்ளதால் அபாயம்

குன்னூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் மற்றும் உணவு தேடி யானைகள் குன்னூருக்கு இடம் பெயர்ந்து வருகிறது. கடல் அலையும், காட்டு யானையும் மனிதனுக்கு எப்போதும் பிரமிப்பை ஏற்படுத்தும் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதுண்டு. அந்த வகை அதிசய விலங்கு தற்போது உணவு, குடிநீர் தேடி அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளாக மேட்டுப்பாளையம், கணுவாய், சின்னத்தடாகம், பெரியதடாகம், அனுவாவிசுப்பிரமணியசாமி கோவில் மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழ்ந்து வருகின்றன.

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் மரம், செடி, கொடிகள் பசுமை இழந்து கருகி விட்டது. இந்த பகுதிகளில் உள்ள குளம், சிற்றோடைகள் வறண்டுவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி  ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாய பயிர்கள் நாசமாவதுடன் மனித- விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்து விடுகிறது. மேட்டுப்பாளையம் மலை அடிவாரத்தையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் யானைகள் உணவு, குடிநீர் மற்றும் வெயிலை சமாளிக்க முடியாமல் நீலகிரி மலைக்கு நாளுக்கு நாள் படையெடுத்து வருகிறது.

சராசரியாக ஒரு யானைக்கு நாள் ஒன்றுக்கு 140 கிலோ முதல் 270 கிலோ வரை பசுந்தழை உணவாக தேவைப்படுகிறது. 160 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. சுமார் 16 மணி நேரம் உணவுக்காக யானைகள் நடந்து கொண்டே இருக்கும். யானையின் ஜீரணம் மிக மந்தமானது. உண்ணும் உணவில் 40 சதவீதம் மட்டுமே செரிமானம் ஆகும். மற்றவைகள் செரிமானம் ஆகாமல் அப்படியே வெளியேறிவிடுகிறது. அந்த கழிவில் விதைகள் அதிகம் இருக்கும். இதனால்தான் யானைகள் தான் வனத்தை உருவாக்குகிறது என்று யானை நல ஆர்வலர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

குட்டி உள்பட 9 யானைக்கூட்டம் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது.

அவைகள் தற்போது குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரன்னிமேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டுள்ளது. யானை கூட்டத்தை பார்த்த கிராம மக்கள் அவைகள் ஊருக்குள் வராமல் இருக்க ஆங்காங்கே தீ மூட்டி வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் யானைகள் முகாமிட்டுள்ளதால் மலை ரயில் வரும்போது விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தவிர தேயிலை தோட்டம், ரயில்வே  பணியாளர்கள் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டதால் காட்டு யானைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் கசிவு நீர் குட்டை அமைத்து மற்ற வனவிலங்களின் தாகத்தையும் தணிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: