×

போடி பஸ்நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு பூட்டு: பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

போடி: போடி பஸ்நிலயத்தில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் பயன்பாடின்றி பூட்டு போடப்பட்டுள்ளது. வெயில் கொளுத்தும் நிலையில், சுத்திகரிப்பு மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர். போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த நகரைச் சுற்றியுள்ள 15 கிராம ஊராட்சிகளில், 40க்கும் மேற்பட்ட கிராமங்களும், போடிமெட்டு, குரங்கணி, வடக்குமலை ஆகிய பகுதிகளில் மலைக்கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் தேவையான பொருட்களை வாங்க, போடிக்கு வந்து செல்கின்றனர். இதனால், பஸ்நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கடந்த 2007ல் அருகில் இருந்த வாரச்சந்தையையும் சேர்த்து பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்தனர். இந்நிலையில், பஸ்நிலையத்துக்கு வரும் பொதுமக்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் குடிநீர் வசதிக்காக, கடந்த 2015-16ல் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு மையம் ஓராண்டு கூட முழுமையாக செயல்படாமல் பழுதடைந்தது. இதையடுத்து சுத்திகரிப்பு மையத்துக்கு பூட்டு போடப்பட்டது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodi , Lock to drinking water treatment plant at Bodi bus stand: Request to bring into use
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்