பெரியகுளம் வடகரை ஊராட்சி வராகநதி பாலத்தில் குவிக்கப்படும் குப்பை: வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

பெரியகுளம்: பெரியகுளத்தில் நகரின் மையப்பகுதியில் வராக நதி ஆறு செல்கிறது. இதில், குப்பைகளை கொட்டக் கூடாது என, நதியை சுத்தம் செய்து தூர்வாரி, ஆற்றின் குறுக்கே செல்லுகிற பாலங்களில், இருபுறமும் கம்பி வலை தடுப்புகளை அமைத்துள்ளனர். ‘வராக நதியை காப்போம்’ என விழிப்புணர்வு பலகைகளை கம்பி வலை தடுப்புகளில் பொருத்தியுள்ளனர். மேலும், வராக நதியில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரம் பகுதியில் உள்ள வராகநதி பாலத்தின் வழியாக தென்கரையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம், கால்நடை மருத்துவமனை, காவல்நிலையம், நகராட்சி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலசுப்பிரமணி திருக்கோயில் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இதனிடையே, குப்பைகளை கொட்டுவதற்காக, வராகநதி பாலத்தின் நுழைவுப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் தொட்டியில் குப்பைகளை கொட்டாமல், பாலத்தின் நுழைவுப் பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இது குறித்து பாலத்தின் வழியாகச் சென்று வரும் அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிகளும் கண்டுகொள்வதில்லை.

எனவே, பாலத்தில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: