×

மாமல்லபுரம் பக்கிங்ஹாம் கால்வாயின் அருகே குப்பை பிரிக்கும் பகுதியால் நிலத்தடி நீர் பாதிப்பு: உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை தாக்கல்

சென்னை:  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சேகரிக்கும் குப்பை, கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டி, அப்பகுதி குப்பை பிரிக்க பயன்படுத்தப்படுகிறது என தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

 அந்த மனுவில், மாசு கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி, குப்பை பிரிக்கும் பகுதி அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது. ஆனால் அதன்பின்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,  நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 அப்போது,  பயோ மைனிங் செயல்முறை திட்டம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதால், 3 மாதங்களில் கழிவுகள் முறையாக அகற்றப்படும் என பேரூராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள் குப்பை கொட்ட அனுமதிக்கும் பேரூராட்சி  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள்,  குப்பை கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி. நானேவை  நீதிமன்ற ஆணையராக நியமித்து உத்தரவிட்டனர். அவர்கடந்த 9ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்து, குப்பை பிரிக்கும் பகுதியின் தற்போதைய நிலை, கால்வாயில் இருந்து எவ்வளவு தூரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக அளிக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து, வழக்கறிஞர் ஆணையர் நானே மாமல்லபுரத்தல் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை பிரிக்கும் இடம் கால்வாயின் கிழக்கு பகுதியில் உள்ளது. கால்வாயின் வடக்கில்  கடந்த 2008 முதல் இயங்கும்  வளங்களை மீட்கும் பூங்கா முழுவதும் குப்பைகள் நிரம்பியுள்ளன. கால்வாயின் கிழக்கு பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் கால்வாயின் தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதி குடியிருப்புவாசிகள் தங்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். கால்வாயில் குப்பைகளை போடுவதால் மழைக்காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags : Mamallapuram Buckingham Canal ,Attorney General ,High ,Court , Groundwater damage due to landfill near Mamallapuram Buckingham Canal: Attorney General files report in High Court
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்...