ஊத்துக்கோட்டையில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்கள் மீது டிரைவர் போலீசில் புகார்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இதன் அருகில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில்,  நேற்று முன்தினம் மாலை  பள்ளி விடப்பட்டதும் பாலவாக்கம்,  சூளைமேனி, தண்டலம் மற்றும் செங்கரை ஆகிய பகுதி  மாணவ - மாணவிகள்   ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.  பின்னர், அங்கு செங்குன்றம் செல்ல தயாராக இருந்த (தடம் எண் - 592) மாநகர பேருந்தில் ஏறினர். பேருந்தை டிரைவர் தென்னரசு இயக்கினார்.  கண்டக்டர் வெங்கடாதிரி டிக்கெட்  கொடுத்துக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து, மாலை 5 மணிக்கு ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து  புறப்பட்டது. அப்போது, பேருந்தின் படிக்கட்டில் சில மாணவர்கள் தொங்கிக்கொண்டு சென்றனர். இதனை  கண்டக்டர் கண்டித்தும் மாணவர்கள் கேட்கவில்லை.  இதனால், டிரைவர் பேருந்தை  ஊத்துக்கோட்டை காவல் நிலையத்துக்கு  முன்பு நிறுத்தினார்.  அப்போது, அங்கு வந்த போலீசார்  படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை கீழே இறக்கி அறிவுரை கூறினர்.  பின்னர் மீண்டும் அதே பேருந்தில் மாணவர்களை ஏற்றி அனுப்பினர்.  இதனால், ஆத்திரமடைந்த சில மாணவர்கள் பேருந்து  5 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு,  தாராட்சி - தொம்பரபேடு இடையில் திடீரென பேருந்தின்  பக்கவாட்டு  கண்ணாடிகளை உடைத்தனர்.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்து  அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  விசாரணை நடத்தினர். இதனையடுத்து,  மாணவர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்து  சேதப்படுத்தியதாக டிரைவர் தென்னரசு காவல் நிலையத்தில் நேற்று  புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: