×

உபி முதல்வராக வரும் 25ல் யோகி பதவியேற்பு: லக்னோவில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு


புதுடெல்லி: வரும் 25ம் தேதி உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். இதற்காக லக்ேனாவில் 75 ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. உபி உள்ளிட்ட 5 மாநில சட்டபேரவைகளுக்கு கடந்த பிப்ரவரி முதல் மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதர  மாநிலங்களான கோவா, மணிப்பூர்,உத்தரகாண்ட், உபி மாநிலங்களில் பாஜ மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துகொண்டது. உபியில் பாஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உபியில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்நிலையில்  யோகி ஆதித்யநாத் தலைமையில் உபி.யில் பாஜ ஆட்சி அமைக்கவுள்ளது.  வரும் 25ம்தேதி  யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி,சமாஜ்வாடி  கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோருக்கும்  அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   பதவியேற்பு விழாவில் 75,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள்  அமைக்கப்படும் என்று  மாநில கூடுதல் தலைமை செயலாளர்  தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முதல்வர் யார்?; உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை  தேர்ந்தெடுக்க மாநில பாஜ சட்டபேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை நடக்கிறது. இதில், கட்சியின் மேலிட பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மீனாட்சி லேகி  ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று பாஜவின் செய்தி தொடர்பாளர் சதாப் ஷாம்ஸ் தெரிவித்தார்.

Tags : Ubi ,Lucknow , Yogi takes over as UP Chief Minister on the 25th: Arrange for a grand ceremony in Lucknow
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்