×

இன்னும் சில ஆண்டுகளில் காஷ்மீரில் சிஆர்பிஎப் படை பாதுகாப்பு தேவைப்படாது: அமித்ஷா நம்பிக்கை

ஜம்மு: ‘காஷ்மீரில் இன்னும் சில ஆண்டுகளில் சிஆர்பிஎப்பின் பாதுாகாப்பு அவசியமின்றி போகலாம்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 85வது நிறுவன நாள் விழா ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்றது. பொதுவாக இந்த விழா தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் நிலையில் முதல் முறையாக இம்முறை ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஆர்பிஎப் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பேசியதாவது:

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான சிஆர்பிஎப் தனது தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் தேசபக்தியின் மூலமாக அன்பு மற்றும் மரியாதையை பெற்றுள்ளது. நாட்டில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருந்தாலும், காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதமாக இருந்தாலும் அல்லது வடகிழக்கில் தீவிரவாத சக்தியாக இருந்தாலும் அவர்களை அகற்றி அமைதியை நிலைநாட்டுவதில் சிஆர்பிஎப் முக்கிய பங்காற்றியுள்ளது. இப்பிராந்தியங்களில் சிஆர்பிஎப் படை மேற்கொண்ட உறுதிமிக்க பணியின் மூலம், 3 பிராந்தியங்களிலும் முழுமையாக அமைதி நிலவி அங்கு அடுத்த சில ஆண்டுகளில் சிஆர்பிஎப் படையின் அவசியம் இல்லாமல் போகலாம். அது நடந்தால் முழுப் புகழும் சிஆர்பிஎப் படையையே சேரும்.

எதிர்கால சவால்களை சந்திப்பதற்கான செயல்திட்டங்களை துணை ராணுவத்தினர் வகுத்து தயார் நிலையில் இருக்க வேண்டும். காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு அனைவரையும் உள்ளடக்கிய அடித்தளத்தில் இருந்து வளர்ச்சி தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Kashmir ,Amit Shah , No need for CRPF force protection in Kashmir in a few more years: Amit Shah hopes
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...