×

உக்ரைன் போரில் ரஷ்யா முதல் முறையாக ஹைபர்சோனிக் ஏவுகணை தாக்குதல்: ஆயுதம் மற்றும் வெடிபொருள் கிடங்கு அழிப்பு

லிவிவ்: உக்ரைன் போரில் முதல் முறையாக ஒலியை விட வேகமாக பாயக்கூடிய ஹைபர்சோனிக் ஏவுகணையை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், உக்ரைனின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள் கிடங்கு அழிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, தொடர்ந்து 24வது நாளாக நேற்றும் தனது தாக்குதலை சற்றும் குறைத்துக் கொள்ளாமல் சண்டையிட்டு வருகிறது. இதுவரை பல முக்கிய நகரங்களில் குடியிருப்புகள், அரசு கட்டிடங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என பல கட்டிடங்கள் மீது குண்டுவீசி உக்ரைன் நாட்டையே ரஷ்யா சர்வ நாசமாக்கி உள்ளது. இந்நிலையில், நேற்று முதல் முறையாக ஹைபர்சோனிக் ஏவுகணையை ஏவி, உக்ரைனின் ஆயுத கிடங்கு ஒன்றை அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் இகோர் கோனாசென்கோவ்வின் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், ‘‘மேற்கு உக்ரைனின் இவானோ-பிரான்கிவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் ஆயுத மற்றும் வெடிபொருள் கிடங்கு மீது ரஷ்ய ராணுவம் ஹைபர் சோனிக் ஏவுகணை ஏவி தாக்கி அழித்துள்ளது’’ என கூறி உள்ளார். கின்சால் என பெயரிடப்பட்டுள்ள அந்த ஹைபர்சோனிக் ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில், 1250 மைல் அப்பால் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது. எந்த ஏவுகணை இடைமறிப்பு அமைப்பாலும் இந்த ஏவுகணையை தடுத்து நிறுத்த முடியாது. முதல் முறையாக ரஷ்யா இந்த ஏவுகணையை கடந்த 2016ம் ஆண்டில் சிரியா போரில் பயன்படுத்தி உள்ளது. இதுதொடர்பான சில புகைப்படங்களையும் ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ளது.

மிக்31 கே போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை அணு ஆயுதத்தையும் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது என்பதால் இதை ரஷ்யா, உக்ரைன் மீது பயன்படுத்தி இருப்பது அணு ஆயுதப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ருமேனியா எல்லையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஏவுகணை தாக்குதலில், ஒடேசாவில் உள்ள உக்ரைனின் ரேடியோ உளவு மையமும் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே போல மரியுபோலில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்டீல் தொழிற்சாலையான அசோவ்ஸ்டல் ஆலையையும் ரஷ்ய ராணுவம் குண்டுவீசி நேற்று தகர்த்தது. உக்ரைனின் பொருளாதார தேவைக்கு உதவும் பெரும்பாலான ஆலைகளை ரஷ்யா அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போரில் மரியுபோல் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடர்ந்து மக்கள் கார்கள் மூலம் அண்டை மாகாணங்களுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். மேலும், ஜபோரிஜியாவில் நேற்று நடந்த குண்டுவீச்சில் பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் அந்நகர துணை மேயர் கூறி உள்ளார். தெற்கு உக்ரைனில் ராணுவ முகாம் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியானதாக உக்ரைன் அரசு கூறி உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் மனிதாபிமான பாதைகள் வழியாக மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்வதும் தடை பட்டுள்ளதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

98 வயதில் ராணுவத்தில் : சேர விரும்பிய பாட்டி: உக்ரைன் ராணுவத்தில் 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் இணையலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்காக, தாய்நாட்டுக்காக பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், 98 வயதான உக்ரைன் பாட்டி ரஷ்யாவுக்கு எதிராக போரிட ராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்த சம்பவம் வெளியாகி உள்ளது. ஓல்ஹா டிவெர்டோக்லிபோவா (98) என்கிற மூதாட்டி, போர் பிரியர். 2ம் உலகப் போரில் பங்கேற்று வெறித்தனமாக சண்டையிட்டவர். ரஷ்யா தனது தாய்நாட்டிற்குள் புகுந்ததும், உக்ரைன் ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு விண்ணப்பித்துள்ளார். ஆனால் வயது மூப்பு காரணமாக அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. ஆனாலும், அந்த மூதாட்டி 2ம் உலகப் போரைப் போலவே தனது வாழ்நாளில் மற்றொரு போர் வெற்றியை ருசிப்பார் என வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வெடிக்காத குண்டுகளை: அகற்ற வருடங்கள் ஆகும்; உக்ரைனின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மோனாஸ்டைர்ஸ்கை அளித்த பேட்டியில், ‘‘ரஷ்ய ராணுவம் வீசிய ஏராளமான வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் இன்னும் வெடிக்காமல், கட்டிட இடிபாடுகளிலும் மண்ணிலும் புதைத்துள்ளன. அவற்றை அகற்றுவது மிகக்கடினமான பணி. வெடிக்காத குண்டுகளை பத்திரமாக அப்புறப்படுத்த மாதங்கள் இல்லை, வருடக்கணக்காகும்’’’ என்றார்.

பல தலைமுறைகளை ரஷ்யா இழந்துவிடும்: உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். மாஸ்கோ கால்பந்து ஸ்டேடியத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் புடின், உக்ரைன் போருக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை தேச துரோகிகள் என கடுமையாக விமர்சித்தார். இந்த பேட்டிக்கு பதிலளித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் வெளியிட்ட வீடியோவில், ‘‘ரஷ்யா வேண்டுமென்றே ஒரு மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்ய படைகளை அதிபர் புடின் புகழ்கிறார். ஆனால் இங்கு ரஷ்ய படையினர் 14,000 பேர் பலியாகி உள்ளனர். இப்போரால் ரஷ்யா பல தலைமுறைகளை இழந்து விடும். இதெல்லாம் ரஷ்யாவினால் தான் நிகழ்ந்தது. இனியாவது போரை நிறுத்த பொறுப்பான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கான சரியான நேரம் வந்து விட்டது. அதற்கு புடின் முன்வர வேண்டும்’’ என்றார். இப்போரில் ரஷ்ய வீரர்கள் 9,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கூறி உள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் ஒப்பந்தம் ைகயெழுத்து: மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக, இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்வதாக அறிவித்தது. இந்நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து ஐஓசி நிறுவனம் 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவை எச்சரித்த அதிபர் பைடன்: போரால் கடுமையாக பொருளாதார தடையை சந்தித்துள்ள ரஷ்யா தற்போது சீனாவிடம் ராணுவ, பொருளாதார உதவிகள் கோரியுள்ளது. இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காணொலி வாயிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என சீனாவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கைக்கு சீன தரப்பில் என்ன கூறப்பட்டது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி பேசுகையில், ‘‘உக்ரைன் விவகாரத்தில் சீனா எடுக்கும் நிலைப்பாட்டின்படி தான் வரலாற்றுப் புத்தகத்தில் அதன் பக்கங்கள் எழுதப்படும். அதை சீனா உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

112 குழந்தைகள் பலி: உக்ரைன் போரில் இதுவரை 112 குழந்தைகள் பலியாகி இருப்பதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. போர் காரணமாக சுமார் 32 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதில் 15 லட்சம் பேர் குழந்தைகள் ஆவர். 65 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு நாட்டிற்குள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தள்ளனர். 140 குழந்தைகள் போரில் காயமடைந்துள்ளனர். தொடர் தாக்குதால் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அண்டை நாடுகளுக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

4 அமெரிக்க வீரர்கள் பலி: உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், நேட்டோ நாடுகளில் ஒன்றான நார்வேயில் பிரமாண்ட போர் ஒத்திகை கடந்த 14ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை நடந்து வருகிறது. இந்நிலையில், நார்ட்லேண்ட் கவுன்டி பகுதியில் போர் பயிற்சியை தொடர்ந்து கப்பலுக்கு திரும்பும் வழியில் அமெரிக்காவின் வி-22பி ஓஸ்பிரே போர் விமானம் நேற்று திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 4 அமெரிக்க வீரர்களும் பலியானதாக கூறப்படுகிறது.


Tags : Russia ,Ukraine , Russia launches first hypersonic missile strike on Ukraine war: weapons and ammunition depot destroyed
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...