×

கொடுங்கையூரில் பட்டப்பகலில் வீடு புகுந்து பயங்கரம் ரூ.20 கோடி போதைப்பொருள் பதுக்கியவரின் மகன்கள் கடத்தல்: 3 பேர் கைது; பரபரப்பு தகவல்

சென்னை:  கொடுங்கையூர் எருக்கஞ்சேரி லட்சுமி அம்மன் நகர் வடிவுடையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயின் அலாவுதீன் (55). இவரது மனைவி கம்ரூன் நிஷா (49), மகன்கள் முகமது அஜிஸ் (27), ஜாகிர் உசேன் (24). கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டை பகுதியில் மெத்பெட்டமின் எனும் போதைப் பொருளை வைத்திருந்ததாக போலீசார் சிலரை பிடித்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜெயின் அலாவுதீனுக்கு தொடர்பு உள்ளதாகவும், அவரிடம் மெத்பெட்டமின் எனும் போதைப்பொருள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த  15ம் தேதி மதியம் அலாவுதீன் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் தங்களை போலீஸ் எனக்கூறிகொண்டு ஜெயின் அலாவுதீனின் இரண்டு மகன்களையும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். ‘உங்களிடம் விசாரணை செய்யவேண்டும். உங்களது தந்தை தலைமறைவாக உள்ளார்’ என்று கூறி அவர்களை அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு 2 மணி நேரம் கழித்து ஜெயின் அலாவுதீனின் மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், உங்களது இரண்டு மகன்களையும் கடத்தி வைத்துள்ளோம்.  

உங்கள் வீட்டில் உள்ள போதைப்பொருளை கொடுத்துவிட்டு மகன்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கம்ரூன் நிஷா போலீசுக்கு சொல்ல முடியாமல் தவித்துள்ளார்.  அடுத்த சில மணி நேரங்களில் கடத்தப்பட்ட மகன்களுடன் வந்த ஒரு கும்பல், வீட்டில் இருந்த  ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை எடுத்துக்கொண்டு மீண்டும் 2 மகன்களையும் கடத்திச் சென்றுள்ளனர். அதன்பிறகு, மீண்டும் கம்ரூன் நிஷாவை தொடர்பு கொண்டு  ரூ.20 லட்சம்  கொடுத்துவிட்டு மகன்களை அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளது.  

இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் விசாரணைக்காக போலீசார்  ஜெயின் அலாவுதீன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கம்ரூன்  நிஷா தனது மகன்கள் கடத்தப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த விஷயம் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்ய பாரதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  தனிப்படை போலீசார் ஆலோசனைப்படி கடத்தல்காரர்கள் போன் செய்யும் போது போனை எடுத்து பேசிய கம்ரூன் நிஷா ரூ.20 லட்சம் இப்போது இல்லை. 6 லட்சம் ரூபாய் தான் தரமுடியும் என்று தெரிவித்துள்ளார்.  அதன்பிறகு நேற்று முல்லை நகர் பகுதியில் ஒரு இடத்தில் 6 லட்சம் ரூபாய் பணத்துடன் இருவரை கம்ரூன் நிஷா அனுப்பி வைத்துள்ளார்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த போலீசார் சுற்றிவளைத்து 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மணலி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (36), ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24),  பெரியசேக்காடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (26)  என்பது விசாரணையில் தெரிந்தது. இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயின் அலாவுதீனுக்கும் வண்ணாரப்பேட்டையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதும் வண்ணாரப்பேட்டையில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பெத்பெட்டமின்  எனும் போதைப்பொருளை சிலர் ஜெயின் அலாவுதீனியிடம் கொடுத்து வைத்ததாகவும் அதனை பெறுவதற்காகவே கடத்தல் சம்பவம் நடந்துள்ளதும் தெரிந்தது.

போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசாரிடம் செல்ல மாட்டார்கள் என்று கருதிய கடத்தல் கும்பல் துணிகரமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. மேலும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய காஜா பாய், மூவேந்தர் சங்கர், முரளி, செல்வம், மோனிஷ் உள்ளிட்ட பலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாதாரண கடத்தல் வழக்கு என்று போலீசார் தேடிய நிலையில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள ெஜயின் அலாவுதீனை கைது செய்தால் அவரது வீட்டிலிருந்து கடத்தல்காரர்கள் எடுத்த போதைப்பொருள் எங்கு வாங்கப்பட்டது என்றும் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது தெரியும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

மகன்கள் மீட்பு
3 பேரிடம் விசாரித்ததில் மணலியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட்ட ஜெயின் அலாவுதீனின் மகன்களை அடைத்து வைத்திருப்பதாக  போலீசாரிடம் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார்  இரு மகன்களையும் மீட்டனர். மேலும் அந்த அறையை சோதித்ததில்,  ஜெயின் அலாவுதீன் வீட்டிலிருந்து கடத்தல்காரர்களால் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.20 கோடி மதிப்புள்ள  போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். 20 கோடி ரூபாய் போதை பொருளை ஏற்கனவே  கடத்தல்காரர்கள் எடுத்துவிட்ட நிலையில் ரூ.20 லட்சம் பேரத்தில் ரூ.6 லட்சத்துக்கு ஆசைப்பட்டு வந்தபோது சிக்கியுள்ளனர்.

Tags : Kodungaiyur , Kodungaiyur, Drugs, Sons Abduction, Arrest,
× RELATED கேடுகளுக்கு வழிவகுக்கும்...