×

கோத்தகிரி வனப்பகுதியில் 12 மணி நேரமாக எரிந்த காட்டுத்தீ: 30 ஏக்கர் நாசம்: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கோத்தகிரி: மேட்டுப்பாளையம்-கோத்தகிரி செல்லும் சாலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டுத்தீ ஏற்பட்டது. நேற்று காலை வரை தொடர்ந்து 12 மணி நேரமாக எரிந்த தீயை, வன ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் சிறிதளவில் பரவிய காட்டுத்தீ, தட்டப்பள்ளம் வனப்பகுதிக்குள் பரவியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் காட்டுத்தீ வனப்பகுதி முழுவதும் மளமளவென பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மலைப்பாங்கான வனப்பகுதி என்பதால், காட்டுத்தீ சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், தீயின் அருகே யாரும் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்து வந்த மான்கள், காட்டு மாடு, சிறுத்தை மற்றும் அறிய வகை பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

நேற்று காலை 7 மணிக்கு மேல் காற்றின் வேகம் குறைந்தால், தீயணைப்பு வீரர்கள், வன ஊழியர்கள் 12 மணி நேரமாக போராடி  காட்டுத்தீயை அணைத்தனர். கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால், காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : Kotagiri forest , Wildfire burns for 12 hours in Kotagiri forest: 30 acres destroyed: Firefighters fight and extinguish
× RELATED நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி வனச்சரகத்தில் 2 சிறுத்தைகள் பலி