×

பழநியில் பங்குனி தேரோட்டம் 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: விண்ணைப் பிளந்தது ‘அரோகரா’ கோஷம்

பழநி: பழநியில் நடந்த பங்குனி உத்திர தேரோட்டத்தில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

முத்திரை நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4.45 மணிக்கு துவங்கியது. விநாயகர், வீரபாகு தெய்வங்கள் சிறு தேர்களில் முன்னே செல்ல, கோயில் யானை கஸ்தூரி தள்ள பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கிரிவீதிகளில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தையொட்டி பழநி நகரில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். நகர் முழுவதும் பக்தர்களின் நடமாட்டங்களே அதிகளவு இருந்தது. பக்தர்கள் ஆடிய காவடி ஆட்டம், கும்மியாட்டம் போன்றவை காண்போரை பரவசமடையச் செய்தது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற அலகு குத்துதல், காவடி எடுத்தல், தீர்த்த கலசங்கள் கொண்டு வருதல் போன்ற நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக பழநி நகரில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



Tags : Palani ,Panguni Therottam , 3 lakh devotees flock to Palani for Panguni Therottam
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்